மத்தேயு 4:13-22
மத்தேயு 4:13-22 TCV
அவர் நாசரேத்தை விட்டு கப்பர்நகூமுக்குப் போய், அங்கே வாழ்ந்தார், அது செபுலோன், நப்தலி பகுதிகளிலுள்ள கடற்கரைக்கு அருகே இருந்தது. இறைவாக்கினன் ஏசாயா மூலமாய்: “செபுலோன் நாடே, நப்தலி நாடே, யோர்தானின் மறுபக்கமாக கடலுக்குப் போகும் வழியே, யூதரல்லாதவர் வாழும் கலிலேயாவிலே, இருளில் வாழும் மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; மரண இருள்சூழ்ந்த நாட்டில் வாழ்வோர்மேல் வெளிச்சம் பிரகாசித்தது,” என்று சொல்லப்பட்டவை நிறைவேறும்படியே இப்படி நடந்தது. அந்த வேளையிலிருந்து இயேசு, “மனந்திரும்புங்கள், பரலோக அரசு சமீபித்திருக்கிறது” என்று பிரசங்கிக்கத் தொடங்கினார். இயேசு கலிலேயா கடற்கரையில் நடந்து போகும்போது, பேதுரு என அழைக்கப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா ஆகிய இரண்டு சகோதரரைக் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களிடம், “வாருங்கள், என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களை இறைவனுடைய வழியில் மனிதரை நடத்துகிறவர்களாக மாற்றுவேன்” என்றார். உடனே அவர்கள் தங்கள் வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள். இயேசு அங்கேயிருந்து போய்க்கொண்டிருக்கையில், வேறு இரண்டு சகோதரர்களான செபெதேயுவின் மகன் யாக்கோபையும், அவனுடைய சகோதரன் யோவானையும் கண்டார். அவர்கள் தங்கள் தகப்பன் செபதேயுவுடன் ஒரு படகில் இருந்து, தங்கள் வலைகளை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் கூப்பிட்டார். உடனே அவர்கள் படகையும், தங்கள் தகப்பனையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள்.


