மத்தேயு 27:32-46
மத்தேயு 27:32-46 TCV
அவர்கள் இயேசுவை வெளியே கொண்டுபோகும்போது, சிரேனே ஊரைச்சேர்ந்த சீமோன் என்னும் பெயருடைய ஒருவனைக் கண்டு, சிலுவையைத் தூக்கும்படி அவனைக் கட்டாயப்படுத்தினார்கள். அவர்கள் கொல்கொதா எனப்பட்ட ஒரு இடத்திற்கு வந்தார்கள். கொல்கொதா என்பதன் அர்த்தம், “மண்டையோட்டின் இடம்” என்பதாகும். அங்கே அவர்கள் இயேசுவுக்குக் கசப்பு கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால் அவர் அதை ருசி பார்த்தபின் குடிக்க மறுத்தார். அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தபின், அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய உடைகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள். “அவர்கள் எனது உடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, எனது உடைகளுக்காக சீட்டுப்போட்டார்கள்” என்று இறைவாக்கினனால் கூறப்பட்ட வார்த்தை நிறைவேறும்படியே இப்படி நடந்தது. பின்பு அவர்கள் அங்கே உட்கார்ந்து, இயேசுவைக் காவல் காத்தார்கள். அவருடைய தலைக்கு மேலாக அவருக்கெதிரான குற்றச்சாட்டாக இப்படி எழுதி வைத்தார்கள்: இவர் இயேசு, யூதரின் அரசன். அவருடன் இரண்டு கள்வர்கள், ஒருவன் வலதுபக்கத்திலும் மற்றொருவன் இடது பக்கத்திலுமாக சிலுவைகளில் அறையப்பட்டிருந்தார்கள். அவ்வழியாகக் கடந்து போனவர்கள் ஏளனமாய் தங்கள் தலைகளை அசைத்து, அவரைப் பழித்துரைத்தார்கள். அவர்கள், “ஆலயத்தை அழித்து, அதை மூன்று நாட்களில் கட்டுவேன் என்று சொன்னவனே, உன்னை நீயே விடுவித்துக்கொள்! நீ இறைவனின் மகனானால் சிலுவையிலிருந்து இறங்கி வா!” என்று பழித்துரைத்தார்கள். அவ்விதமாகவே தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும், தலைவர்களும், அவரை ஏளனம் செய்தார்கள். மேலும் அவர்கள், “இவன் மற்றவர்களை இரட்சித்தான், ஆனால் தன்னையோ இரட்சித்துக்கொள்ள முடியாதிருக்கிறான்! இவன் இஸ்ரயேலுக்கு அரசன்! இவன் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும்; அப்பொழுது நாங்கள் இவனில் விசுவாசம் வைப்போம். இவன் இறைவனைச் சார்ந்து இருக்கிறான். ‘நான் இறைவனின் மகன்’ என்றானே. இறைவனுக்கு விருப்பமானால், இப்பொழுது அவர் இவனை விடுவிக்கட்டும்” என்றார்கள். அவ்விதமாகவே, இயேசுவுடனே சிலுவையில் அறையப்பட்ட கள்வர்களும் அவரை ஏளனம் செய்தார்கள். நண்பகல் பன்னிரண்டு மணியிலிருந்து, பூமியெங்கும் இருள் சூழ்ந்து பிற்பகல் மூன்று மணிவரை நீடித்திருந்தது. பிற்பகல் மூன்றுமணியளவில், இயேசு பலத்த சத்தமிட்டு, “ஏலீ, ஏலீ, லாமா சபக்தானி” என்று சத்தமாய்க் கூப்பிட்டார். “என் இறைவனே, என் இறைவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்பதே அதன் அர்த்தமாகும்.




