மத்தேயு 26:47-56

மத்தேயு 26:47-56 TCV

இயேசு இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில், பன்னிரண்டு சீடர்களில் ஒருவனாகிய யூதாஸ் அங்கே வந்தான். அவனுடன் ஒரு பெருங்கூட்டம் வாள்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு வந்தது. இவர்கள் தலைமை ஆசாரியர்களாலும் யூதரின் தலைவர்களாலும் அனுப்பப்பட்டிருந்தார்கள். இயேசுவைக் காட்டிக்கொடுப்பவன், தான் அவர்களுக்கு ஒரு சைகையைக் காண்பிப்பதாகச் சொல்லியிருந்தான்: “நான் முத்தமிடுகிறவனே, அந்த மனிதர்; அவரைக் கைதுசெய்யுங்கள்” என்று சொல்லியிருந்தான். யூதாஸ் இயேசுவுக்குச் சமீபமாக வந்து, “போதகரே வாழ்க!” என்று சொல்லி, அவரை முத்தமிட்டான். இயேசு யூதாஸிடம், “நண்பனே, நீ எதற்காக வந்தாயோ, அதைச் செய்!” என்றார். அப்பொழுது அவனுடன் வந்தவர்கள் முன்னேவந்து, இயேசுவைப் பிடித்து அவரைக் கைது செய்தார்கள். அவ்வேளையில் இயேசுவுடன் இருந்தவர்களில் ஒருவன் தனது வாளை உருவி பிரதான ஆசாரியனின் வேலைக்காரனின் காதை வெட்டினான். இயேசு அவனிடம், “உன் வாளை அதன் உறையிலே போடு, ஏனெனில் வாளை எடுக்கிற அனைவரும் வாளினாலேயே சாவார்கள். என் பிதாவை நோக்கி, என்னால் கூப்பிட முடியாது என்று நீ நினைக்கிறாயா? நான் கேட்டால் அவர் உடனே எனக்காக பன்னிரண்டுக்கும் அதிகமான தூதர் சேனையை அனுப்புவார் அல்லவா? ஆனால் நான் அப்படிச் செய்தால், இவ்விதமாக நிகழவேண்டும் என்று சொல்கிற வேதவசனம், எப்படி நிறைவேறும்?” என்றார். அவ்வேளையில் இயேசு அந்தப் பெருங்கூட்டத்தைப் பார்த்து, “நான் ஆபத்தான புரட்சியை உண்டாக்குகிறேனா, அதனாலேயா என்னைப் பிடிப்பதற்கு நீங்கள் வாள்களுடனும் தடிகளுடனும், வந்திருக்கிறீர்கள்? நான் ஒவ்வொரு நாளும் ஆலய முற்றத்தில் உட்கார்ந்து போதித்துக் கொண்டிருந்தேனே; அப்பொழுது நீங்கள் என்னைக் கைதுசெய்யவில்லை. ஆனால் இறைவாக்கினர் எழுதி வைத்தவை நிறைவேறும்படியே இவையெல்லாம் நிகழ்கின்றன” என்றார். அப்பொழுது சீடர்கள் எல்லோரும் இயேசுவைத் தனியே விட்டுவிட்டு ஓடிப்போனார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்