மத்தேயு 25:31-46

மத்தேயு 25:31-46 TCV

“மானிடமகனாகிய நான் எனது மகிமையில் வரும்போது, தூதர்கள் எல்லோரும் என்னுடன் வருவார்கள்; நான் பரலோக மகிமையுடன் எனது அரியணையில் அமர்ந்திருப்பேன். எல்லா ஜனத்தாரும் எனக்கு முன்பாக ஒன்றுசேர்க்கப்படுவார்கள். மேய்ப்பன் ஒருவன் வெள்ளாடுகளிலிருந்து செம்மறியாடுகளைப் பிரிப்பதுபோல், மக்களையும் நான் ஒருவரிலிருந்து ஒருவரை வேறு பிரிப்பேன். நான் செம்மறியாடுகளை எனது வலதுபக்கத்தில் நிறுத்துவேன், வெள்ளாடுகளை எனது இடதுபக்கத்தில் நிறுத்துவேன். “அப்பொழுது நான் வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, ‘என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே வாருங்கள்; உலகம் படைக்கப்பட்டதிலிருந்தே உங்களுக்காக ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற அரசை சுதந்தரித்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், எனக்கு உணவு கொடுத்தீர்கள்; நான் தாகமாயிருந்தேன், அப்பொழுது எனக்குக் குடிக்கக் கொடுத்தீர்கள்; நான் அந்நியனாய் இருந்தேன், என்னை நீங்கள் உங்கள் வீட்டிற்குள் அழைத்தீர்கள்; நான் உடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு உடை கொடுத்தீர்கள்; நான் வியாதியாய் இருந்தேன், நீங்கள் என்னை கவனித்துக் கொண்டீர்கள்; நான் சிறையில் இருந்தேன், அப்பொழுது என்னைப் பார்க்க வந்தீர்கள்’ என்று சொல்வார். “அப்பொழுது நீதிமான்கள் என்னிடம், ‘ஆண்டவரே, எப்பொழுது நாங்கள் உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு, உணவு கொடுத்தோம், அல்லது தாகம் உள்ளவராகக் கண்டு, குடிக்கக் கொடுத்தோம்? எப்பொழுது உம்மை அந்நியராயிருக்கக் கண்டு, எங்கள் வீட்டிற்குள் அழைத்தோம், அல்லது உடை இல்லாதவராகக் கண்டு, உடை கொடுத்தோம்? எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகக் கண்டோம், அல்லது உம்மைச் சிறையில் வந்து பார்த்தோம்?’ என்பார்கள். “அதற்கு நான், ‘உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், எனது சகோதரரில் மிகச் சிறியவர்களான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்’ என்று பதிலளிப்பேன். “பின்பு நான் எனது இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, ‘சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள். பிசாசுக்காகவும், அவனுடைய தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்ட நித்திய நெருப்புக்குள் போங்கள்’ ” என்று சொல்வேன். ஏனெனில், நான் பசியாயிருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; நான் தாகமாயிருந்தேன், நீங்கள் எனக்குக் குடிக்கக்கொடுக்கவில்லை; நான் அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னை உங்கள் வீட்டிற்குள் அழைக்கவில்லை; நான் உடையில்லாதவனாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உடை கொடுக்கவில்லை; நான் வியாதியாயும் சிறையிலும் இருந்தேன், நீங்கள் என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை, என்று சொல்வார். “அதற்கு அவர்கள், ‘ஆண்டவரே, எப்பொழுது நாங்கள் உம்மை பசியுள்ளவராகவும் தாகமுள்ளவராகவும் கண்டோம்? எப்பொழுது நாங்கள் உம்மை அந்நியராகவும் உடையில்லாதவராகவும் கண்டோம்? எப்பொழுது நாங்கள் உம்மை வியாதியுள்ளவராகவும் சிறையிலிருப்பவராகவும் கண்டோம்? எப்பொழுது நாங்கள் உமக்கு உதவி செய்யாதிருந்தோம்?’ எனக் கேட்பார்கள். “அதற்கு நான் அவர்களுக்கு, ‘உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதை செய்யவில்லையோ, அதை எனக்கே செய்யவில்லை’ என்பேன். “அப்பொழுது இவர்கள் நித்திய தண்டனைக்குள்ளும், நீதிமான்கள் நித்திய வாழ்விற்குள்ளும் போவார்கள்.”

மத்தேயு 25:31-46 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்