மத்தேயு 23:1-22

மத்தேயு 23:1-22 TCV

பின்பு இயேசு, மக்கள் கூட்டத்தையும் தமது சீடரையும் பார்த்துச் சொன்னதாவது: “மோசேயின் சட்ட ஆசிரியர்களும் பரிசேயரும் மோசேயின் இருக்கையில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஆகவே நீங்கள் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து, அவர்கள் உங்களுக்குச் சொல்லும் ஒவ்வொன்றையும் செய்யுங்கள். ஆனால் அவர்கள் செய்வதை நீங்கள் செய்யவேண்டாம். ஏனெனில் அவர்கள் தாங்கள் பிரசங்கிப்பதைத் தாங்களே செய்வதில்லை. அவர்கள் பாரமான சுமைகளைக் கட்டி மக்களின் தோள்கள்மேல் வைக்கிறார்கள். ஆனால் அவர்களோ, அவற்றை நகர்த்துவதற்குத் தங்களது ஒரு விரலைக்கூட நீட்டவும் மனதற்றவர்களாக இருக்கிறார்கள். “மோசேயின் சட்ட ஆசிரியர்களும் பரிசேயர்களும் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டுமென்றே செய்யப்படுகின்றன: வேதவசனம் பொறித்த இடைப்பட்டிகளை அகலமாக்கி, தங்கள் உடைகளின் தொங்கல்களை நீளமாக்குகிறார்கள்; அவர்கள் ஜெப ஆலயங்களில் மிக முக்கியமான இருக்கைகளையும், விருந்துகளில் மதிப்புக்குரிய இடங்களையும் பெற விரும்புகிறார்கள். சந்தைவெளிகளில் வாழ்த்துக்களைப் பெறவும், மக்கள் தங்களை ‘போதகர்’ என்று அழைப்பதையும் விரும்புகிறார்கள். “நீங்களோ ‘போதகர்’ என்று அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்கு ஒரு போதகர் மட்டுமே இருக்கிறார். நீங்கள் எல்லோரும் சகோதரராய் இருக்கிறீர்கள். பூமியிலுள்ள யாரையும் ‘பிதா’ என்று அழைக்காதிருங்கள். ஏனெனில், உங்களுக்கு ஒரு பிதாவே இருக்கிறார், அவர் பரலோகத்தில் இருக்கிறார். நீங்கள் ‘குருக்கள்’ என்றும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்கு ஒரு குருவே இருக்கிறார், அவர் கிறிஸ்துவே. உங்களில் பெரியவர், உங்களுக்குப் பணிசெய்கிறவராய் இருக்கவேண்டும். ஏனெனில், தன்னைத்தான் உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். “வேஷக்காரர்களாகிய மோசேயின் சட்ட ஆசிரியர்களே, பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் பரலோக அரசின் கதவுகளை மனிதரின் முகத்திலடித்தாற்போல் மூடிவிடுகிறீர்கள். நீங்களும் அதற்குள் செல்வதில்லை. செல்ல விரும்புகிறவர்களையும் அனுமதிக்காமல் இருக்கிறீர்கள். மோசேயின் சட்ட ஆசிரியர்களே, பரிசேயர்களே, வேஷக்காரர்களாகிய உங்களுக்கு ஐயோ, நீங்கள் விதவைகளின் வீடுகளை அபகரிக்கிறீர்கள். ஆனால் மக்கள் காணவேண்டும் என்பதற்காக நீண்டநேரம் மன்றாடுகிறீர்கள். இதனால் நீங்கள் மிகக்கடுமையாகத் தண்டிக்கப்படுவீர்கள். “வேஷக்காரர்களாகிய மோசேயின் சட்ட ஆசிரியர்களே, பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ! ஒருவனை உங்கள் மார்க்கத்திற்கு மாற்றுவதற்கு தரையிலும் கடலிலும் தூரப்பயணம் செய்கிறீர்கள். ஆனால் அவன் உங்கள் மார்க்கத்திற்கு மாறிய பின்போ, உங்களைப் பார்க்கிலும் அவனை இருமடங்காக நரகத்தின் பிள்ளையாக்குகிறீர்கள். “குருடான வழிகாட்டிகளே, உங்களுக்கு ஐயோ! ‘யாராவது ஆலயத்தின்பேரில் சத்தியம் பண்ணினால், அது பரவாயில்லை என்கிறீர்கள்; ஆனால் யாராவது ஆலயத்திலுள்ள தங்கத்தின்மேல் சத்தியம் பண்ணினால், அதைச் செலுத்தியே தீரவேண்டும்’ என்கிறீர்கள். குருடான முட்டாள்களே! தங்கமா, தங்கத்தைப் புனிதமாக்கும் ஆலயமா, எது பெரியது? மேலும் நீங்கள், ‘யாராவது பலிபீடத்தைக் கொண்டு சத்தியம் செய்தால், அது பரவாயில்லை; ஆனால் யாராவது பலிபீடத்தின் மேலுள்ள காணிக்கையின் பேரில் சத்தியம் பண்ணினால், அவர்கள் அதைச் செலுத்தியே ஆகவேண்டும்’ என்கிறீர்கள். குருட்டு மனிதரே! காணிக்கையா, காணிக்கையைப் புனிதமாக்கும் பலிபீடமா, எது பெரியது? எனவே பலிபீடத்தைக் கொண்டு சத்தியம் செய்பவர்கள் பலிபீடத்தைக் கொண்டு மட்டுமல்ல, அதன்மீதுள்ள எல்லாவற்றையும் கொண்டு சத்தியம் செய்கிறார்கள். ஆலயத்தின்பேரில் சத்தியம் செய்பவர்கள் ஆலயத்தைக் கொண்டு மட்டுமல்ல, ஆலயத்தில் குடிகொண்டிருப்பவரைக் கொண்டே சத்தியம் செய்கிறார்கள். வானத்தின் பேரில் சத்தியம் செய்கிறவர்கள் இறைவனின் அரியணையைக் கொண்டும், அதில் அமர்ந்திருக்கும் அவரைக் கொண்டும் சத்தியம் செய்கிறார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்