மத்தேயு 22:1-22

மத்தேயு 22:1-22 TCV

மீண்டும் இயேசு அவர்களோடு உவமைகள் மூலம் பேசி, பரலோக அரசைப் பற்றிச் சொன்னதாவது: “பரலோக அரசு ஒரு அரசன் தனது மகனின் திருமண விருந்தை ஆயத்தப்படுத்தியதற்கு ஒப்பாயிருக்கிறது. விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களை வரும்படி அழைப்பதற்கு, அவன் தன் வேலைக்காரர்களை அவர்களிடம் அனுப்பினான். அவர்களோ வர மறுத்துவிட்டார்கள். “அவன் இன்னும் சில வேலைக்காரர்களை அனுப்பி, ‘அழைக்கப்பட்டவர்களிடம், நான் என்னுடைய விருந்தை ஆயத்தம் செய்திருக்கிறேன்: சிறப்பான விருந்து உங்களுக்கென்று படைக்கப்பட்டு, எல்லாம் ஆயத்தமாய் இருக்கின்றன. திருமண விருந்துக்கு வாருங்கள் என்று சொல்லுங்கள்’ என்றான். “ஆனால் அழைக்கப்பட்டவர்களோ, அதைக் கவனிக்காமல் தங்கள் வேலைகளுக்குச் சென்றார்கள்; ஒருவன் வயலுக்கும் வேறொருவன் தனது வியாபாரத்துக்கும் போனான். மற்றவர்களோ, அரசனுடைய வேலைக்காரர்களைப் பிடித்துத் துன்புறுத்தி அவர்களைக் கொன்றார்கள். அரசன் கடுங்கோபமடைந்தான். அவன் தனது படைகளை அனுப்பி, அந்தக் கொலைகாரர்களை அழித்து, அவர்களுடைய பட்டணத்தை எரித்தான். “பின்பு அரசன் தன் வேலைக்காரர்களிடம், ‘திருமண விருந்து ஆயத்தமாயிருக்கிறது. ஆனால் நான் அழைத்தவர்களோ, அதற்குத் தகுதியற்றவர்களாய்ப் போனார்கள். இப்பொழுது வீதிகளின் சந்திகளுக்குப் போங்கள், நீங்கள் காண்கிறவர்கள் யாராயிருந்தாலும் விருந்துக்கு அழைத்து வாருங்கள்’ என்றான். எனவே வேலைக்காரர்கள் வெளியே வீதிகளில் போய், நல்லவர்களும் கெட்டவர்களுமான தாங்கள் கண்ட எல்லா மக்களையும் கூட்டிச் சேர்த்தார்கள். திருமண மண்டபம் விருந்தாளிகளால் நிரம்பியது. “அரசன் விருந்தினரைப் பார்க்க உள்ளே வந்தபோது, திருமண உடை உடுத்தியிராத ஒருவன் அங்கேயிருப்பதைக் கண்டான். அரசன், ‘நண்பனே, திருமண உடையின்றி, நீ எப்படி இங்கே வந்தாய்?’ என்று கேட்டான். அவன் பேச்சற்று நின்றான். “அப்பொழுது அரசன் ஏவலாட்களிடம், ‘அவனுடைய கையையும் காலையும் கட்டி, வெளியே இருளில் தள்ளுங்கள், அங்கே பற்கடிப்பும் அழுகையும் இருக்கும்’ என்றான். “ஏனெனில் அநேகர் அழைக்கப்படுகிறார்கள், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் சிலர்.” பின்பு பரிசேயர் போய், இயேசுவின் வார்த்தையிலே அவரைக் குற்றம் கண்டுபிடிப்பதற்குத் திட்டமிட்டார்கள். பரிசேயர்கள் ஏரோதியர்களுடன் தங்கள் சீடரை இயேசுவினிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள் அவரிடம், “போதகரே, நீர் நேர்மையானவரும், இறைவனின் வழியை சத்தியத்தின்படியே போதிக்கிறவருமாய் இருக்கிறீர். நீர் மனிதருக்கு முகதாட்சண்யம் காட்டாதவராய் இருப்பதால் ஆள்பார்த்து எதையும் செய்யமாட்டீர் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆகவே ரோமப் பேரரசன் சீசருக்கு வரி செலுத்துவது சரியானதா? இல்லையா? உம்முடைய அபிப்பிராயத்தை எங்களுக்குச் சொல்லும்” என்றார்கள். ஆனால் இயேசுவோ, அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்தவராய் அவர்களிடம், “வேஷக்காரர்களே! நீங்கள் ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? வரியைச் செலுத்துவதற்காகப் பயன்படுத்தும் நாணயத்தை எனக்குக் காட்டுங்கள்” என்றார். அவர்கள் ஒரு வெள்ளிக்காசை அவரிடம் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களிடம் அந்த நாணயத்தைக் காட்டி, “இந்த நாணயத்திலுள்ள உருவம் யாருடையது? இதில் பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்துக்கள் யாருடையவை?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ரோமப் பேரரசன் சீசருடையது” என்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “சீசருடையதை சீசருக்கும், இறைவனுடையதை இறைவனுக்கும் கொடுங்கள்” என்றார். அவர்கள் இதைக் கேட்டவுடன் வியப்படைந்து இயேசுவை விட்டுச் சென்றார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்