மத்தேயு 20:1-16

மத்தேயு 20:1-16 TCV

“பரலோக அரசு நிலத்தின் சொந்தக்காரன் ஒருவன் தனது திராட்சைத் தோட்டத்தில் வேலைசெய்வதற்கென அதிகாலையிலே புறப்பட்டுபோய், கூலியாட்களை கூலிக்கு அமர்த்தியவனுக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் அவர்களுக்கு நாளொன்றுக்கு ஒரு வெள்ளிக்காசைக் கொடுப்பதற்கு உடன்பட்டு, அவர்களைத் திராட்சைத் தோட்டத்திற்குள் அனுப்பினான். “விடிந்த பின்பு கிட்டத்தட்ட காலை ஒன்பது மணியளவில் அவன் வெளியே போனபோது, வேறுசிலர் சந்தைகூடும் இடத்தில் வேலை எதுவும் செய்யாமல் நிற்பதைக் கண்டான். அவன் அவர்களிடம், ‘நீங்களும் போய் எனது திராட்சைத் தோட்டத்தில் வேலைசெய்யுங்கள். நியாயமான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்’ என்றான். அப்படியே அவர்களும் சென்றார்கள். “அவன் மீண்டும் நண்பகல் வேளையிலும், பிற்பகல் மூன்றுமணிக்கும், வெளியே போனபோது, இன்னும் சிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டு முன்புபோலவே செய்தான். கிட்டத்தட்ட மாலை ஐந்து மணிக்கு அவன் வெளியே போய், இன்னும் சிலர் ஒரு வேலையின்றி நின்று கொண்டிருப்பதைக் கண்டான். அவன் அவர்களிடம், ‘நாள் முழுவதுமாக ஒரு வேலையும் செய்யாமல் ஏன் இங்கே நின்றுகொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டான். “அதற்கு அவர்கள், ‘ஒருவரும் எங்களை வேலைக்கு அழைக்கவில்லை’ என்றார்கள். “அவன் அவர்களிடம், ‘நீங்களும் போய் எனது திராட்சைத் தோட்டத்தில் வேலைசெய்யுங்கள்’ என்றான். “மாலை ஆறு மணிக்கு வேலை முடிந்தபோது, திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரன் தனது மேற்பார்வையாளனிடம், ‘வேலையாட்களைக் கூப்பிட்டு, அவர்களுடைய நாள் கூலியைக் கொடு. கடைசியில் வேலைக்கு வந்தவர்கள் தொடங்கி, முதலில் வந்தவர்கள் வரை அவர்களுக்குக் கூலி கொடு’ என்றான். “மாலை ஐந்து மணிக்குப்பின் கூலிக்கு அமர்த்தப்பட்ட வேலையாட்கள் வந்து, ஒவ்வொருவரும் ஒரு முழு நாளுக்குரிய வெள்ளிக்காசைப் பெற்றார்கள். எனவே முதலாவதாக கூலிக்கு அமர்த்தப்பட்டவர்கள் வந்தபோது, அதிகமான கூலியை எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வெள்ளிக்காசையே நாள் கூலியாகப் பெற்றார்கள். அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது, அந்தத் தோட்டத்தின் சொந்தக்காரனுக்கு எதிராய் முறுமுறுக்கத் தொடங்கினார்கள். அவர்கள் அவனிடம், ‘கடைசியாய் கூலிக்கு அமர்த்தப்பட்ட இவர்கள், ஒருமணி நேரம் மட்டுமே வேலைசெய்தார்கள், நாங்களோ வேலையின் கஷ்டத்தையும் பகலின் வெப்பத்தையும் சகித்தோம்; நீர் அவர்களையும் எங்களுக்குச் சமமாக்கினீரே’ என்றார்கள். “நிலத்தின் சொந்தக்காரன் அவர்களில் ஒருவனைப் பார்த்து, ‘நண்பனே, நான் உனக்கு அநியாயம் செய்யவில்லையே. ஒரு வெள்ளிக்காசுக்கு வேலைசெய்ய நீ ஒத்துக்கொள்ளவில்லையா? உனது கூலியைப் பெற்றுக்கொண்டு போ. கடைசி நேரத்தில் கூலிக்கு அமர்த்தப்பட்டவனுக்கும், உனக்குக் கொடுத்ததுபோலவே நான் கொடுக்க விரும்புகிறேன். எனது சொந்தப் பணத்தை நான் விரும்பியபடி செலவு செய்ய எனக்கு உரிமையில்லையா? நான் தாராள குணமுள்ளவனாய் இருக்கிறேன் என்பதால் நீ எரிச்சல் அடையலாமா?’ என்றான். “அப்படியே கடைசியாக இருக்கும் பலர் முதலாவதாகவும், முதலாவதாக இருக்கும் பலர் கடைசியாகவும் இருப்பார்கள்” என்றார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்