மத்தேயு 18:15-20

மத்தேயு 18:15-20 TCV

“உன் சகோதர சகோதரிகளுள் ஒருவர் உனக்கு எதிராகப் பாவம்செய்தால், நீ போய் அவருடைய குற்றத்தை அவருக்குச் சுட்டிக்காட்டு. உங்கள் இருவருக்கும் இடையில் மட்டுமே அது செய்யப்படட்டும். அவர் உனக்குச் செவிகொடுத்தால், நீ உனது சகோதரன் அல்லது சகோதரியை இழக்காமல் காத்துக்கொள்வாய். ஆனால் அவர் உனக்குச் செவிகொடாவிட்டால், ‘எல்லா காரியங்களும் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் மூலம் உறுதி செய்யப்படும்படி,’ வேறு ஒருவரையோ இருவரையோ உன்னுடன்கூட கூட்டிக்கொண்டுபோ. அவர் அவர்களுக்கும் செவிகொடுக்க மறுத்தால், அதைத் திருச்சபைக்குக் கூறு; அவர் திருச்சபைக்கும் செவிகொடுக்க மறுத்தால், அவரை இறைவனை அறியாதவரைப் போலவும் வரி வசூலிக்கிறவரைப் போலவும் நடத்து. “மேலும் நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் எதைப் பூமியில் கட்டுகிறீர்களோ, அது பரலோகத்திலும் கட்டப்படும். நீங்கள் பூமியில் எதைக் கட்டவிழ்க்கிறீர்களோ, அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்படும். “மீண்டும் நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் கேட்கும் எதைக் குறித்தாவது பூமியிலே உங்களில் இருவர் ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்திலிருக்கிற என் பிதாவினால் அது உங்களுக்காகச் செய்யப்படும். ஏனெனில் எங்கே இரண்டு அல்லது மூன்றுபேர் என் பெயரில் ஒன்றாய்கூடி இருக்கிறார்களோ, அங்கே நான் அவர்களுடன் இருக்கிறேன்” என்றார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்