மத்தேயு 12:1-23

மத்தேயு 12:1-23 TCV

அக்காலத்தில் ஓய்வுநாளில், இயேசு தானியம் விளைந்திருந்த வயல் வழியாகச் சென்றார். அவருடைய சீடர்கள் பசியாயிருந்ததினால், அவர்கள் தானியக்கதிர்கள் சிலவற்றைப் பறித்துச் சாப்பிடத் தொடங்கினார்கள். பரிசேயர்கள் இதைக் கண்டபோது, அவர்கள் இயேசுவிடம், “இதோ, உமது சீடர்கள் ஓய்வுநாளில் மோசேயின் சட்டத்தினால் தடைசெய்யப்பட்ட காரியத்தைச் செய்கிறார்களே” என்றார்கள். இயேசு அதற்குப் பதிலாக, “தாவீதும், அவனுடைய கூட்டாளிகளும் பசியாயிருந்தபோது, அவன் செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? அவன் இறைவனுடைய வீட்டிற்குள் போய், அவனும் அவனோடிருந்தவர்களும் மோசேயின் சட்டத்தின்படி ஆசாரியர்கள் மட்டுமே சாப்பிடக்கூடிய தேவசமுகத்து அப்பத்தைச் சாப்பிட்டார்கள். அவர்கள் அப்படிச் செய்தது மோசேயின் சட்டத்திற்கு முரணாயிருந்தது. மேலும், ஆசாரியர்கள் ஓய்வுநாளில் ஆலயத்திலுள்ள தங்கள் வேலையினால் ஓய்வுநாளையே வேலை நாளாக்கினாலும் குற்றமற்றவர்களாய் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் மோசேயின் சட்டத்தில் வாசிக்கவில்லையா? ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஆலயத்தைவிடப் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆனால், ‘நான் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்ற இறைவார்த்தையின் கருத்து உங்களுக்குத் தெரிந்திருந்தால், நீங்கள் குற்றமற்றவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்த்திருக்கமாட்டீர்கள். ஏனெனில், மானிடமகனாகிய நான் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறேன் என்பதை அறிந்துகொள்ளுங்கள்” என்று சொன்னார். இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, அவர்களுடைய ஜெப ஆலயத்திற்குள் சென்றார். அங்கு சுருங்கிய கையுடைய ஒருவன் இருந்தான். இயேசுவின்மேல் குற்றம் சுமத்தும்படி பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அவரிடம், “ஓய்வுநாளில் குணமாக்குவது மோசேயின் சட்டத்திற்கு உகந்ததோ?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களிடம், “உங்களில் யாரிடமாவது ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் ஒரு குழியில் விழுந்தால், நீங்கள் அதைப்பிடித்து வெளியே தூக்கியெடுக்கமாட்டீர்களா? ஆட்டைவிட ஒரு மனிதன் எவ்வளவு மதிப்பு வாய்ந்தவன்! ஆதலால் ஓய்வுநாளிலே மோசேயினுடைய சட்டத்தின்படி நன்மை செய்வது உகந்ததே” என்றார். அதற்குப் பின்பு இயேசு, அந்த மனிதனிடம், “உன் கையை நீட்டு” என்றார். அவன் அப்படியே தன் கையை நீட்டினான். உடனே அது மற்ற கையைப்போல முற்றிலுமாக குணமடைந்தது. அப்பொழுது பரிசேயர் வெளியே போய், இயேசுவைக் கொலை செய்யும்படி சதி செய்தார்கள். இதை அறிந்த இயேசுவோ, அந்த இடத்தைவிட்டுச் சென்றார். அநேகர் அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அவர்களில் எல்லா நோயாளிகளையும் இயேசு குணப்படுத்தினார். அவர், தான் யாரென ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என அவர்களை எச்சரித்தார். இறைவாக்கினன் ஏசாயா மூலமாகக் கூறப்பட்ட இறைவாக்கு நிறைவேறும்படி இது நடந்தது: “இவர் நான் தெரிந்துகொண்ட எனது ஊழியராயிருக்கிறார்; நான் அன்பு செலுத்துகிறவரும் என் மகிழ்ச்சிக்குரியவரும் இவரே. இவர்மேல் என் ஆவியானவரை அமரப்பண்ணுவேன். இவர் யூதரல்லாதவர்களுக்கு நீதியை பிரசித்தப்படுத்துவார். இவர் வாக்குவாதம் செய்யமாட்டார், கூக்குரலிடவுமாட்டார்; யாரும் வீதிகளில் இவருடைய குரலைக் கேட்கவுமாட்டார்கள். நீதிக்கு வெற்றி கிடைக்கும்வரை, அவர் நெரிந்த நாணலை முறிக்கமாட்டார், மங்கி எரிகின்ற திரியை அணைத்துவிடவுமாட்டார். இவருடைய பெயரில் யூதரல்லாதவர்கள் தங்கள் நம்பிக்கையை வைப்பார்கள்.” அப்பொழுது சிலர், பிசாசு பிடித்த ஒருவனை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்; அவன் பார்வையற்றவனும், ஊமையுமாய் இருந்தான். இயேசு அவனை குணமாக்கினார்; அவனால் பேசவும் பார்க்கவும் முடிந்தது. மக்கள் எல்லோரும் வியப்படைந்து, “இவர் தாவீதின் மகனாய் இருப்பாரோ?” என்றார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்