லூக்கா 22:47-71

லூக்கா 22:47-71 TCV

இயேசு இன்னும் பேசிக்கொண்டிருக்கையில், ஆட்கள் கூட்டமாய் வந்தார்கள். பன்னிரண்டு சீடர்களில் ஒருவனான யூதாஸ் என்று அழைக்கப்பட்டவன், அவர்களை வழிநடத்திக் கொண்டுவந்தான். அவன் இயேசுவை முத்தம் செய்வதற்காக, அவருக்குக் சமீபமாய் வந்தான். இயேசுவோ அவனிடம், “யூதாசே, என்னை முத்தத்தினால் காட்டிக்கொடுக்கிறாயோ?” என்றார். இயேசுவைப் பின்பற்றியவர்கள், நடக்கப்போவதைக் கண்டு, “ஆண்டவரே, நாங்கள் எங்கள் வாளினாலே வெட்டட்டுமா?” என்று கேட்டார்கள். சீடர்களில் ஒருவன், பிரதான ஆசாரியனின் வேலைக்காரனின் வலது காதை வெட்டினான். அப்பொழுது, அவனது வலது காது வெட்டுண்டது. ஆனால் இயேசுவோ, “போதும், நிறுத்துங்கள்!” என்று சொல்லி, அவனுடைய காதைத் தொட்டு, அவனைக் குணமாக்கினார். அப்பொழுது இயேசு, தம்மைப் பிடிக்கும்படி வந்திருந்த தலைமை ஆசாரியர்களையும், ஆலயகாவலர் அதிகாரிகளையும், யூதரின் தலைவர்களையும் பார்த்து, “நான் ஆபத்தான புரட்சியை உண்டாக்குகிறேனா, அதனாலேயா என்னைப் பிடிப்பதற்கு வாள்களுடனும் தடிகளுடனும் வந்திருக்கிறீர்கள்? நான் ஒவ்வொரு நாளும் ஆலய முற்றத்தில் உட்கார்ந்து போதித்துக் கொண்டிருந்தேனே; அப்போது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லை. ஆனால், இதுவே உங்கள் வேளையாய் இருக்கிறது. இருள் அதிகாரம் செலுத்தும் வேளையே இது” என்றார். அவர்கள் இயேசுவைப் பிடித்து, பிரதான ஆசாரியன் வீட்டிற்குக் கொண்டுசென்றார்கள். பேதுரு சிறிது தூரத்தில் பின்தொடர்ந்து போய்க்கொண்டிருந்தான். அந்த வீட்டு முற்றத்தின் நடுவில் சிலர் நெருப்புமூட்டி, அதன் அருகே ஒன்றாய் உட்கார்ந்தார்கள். அப்போது பேதுருவும் அவர்களுடன் உட்கார்ந்திருந்தான். பேதுரு அங்கே உட்கார்ந்திருப்பதை, ஒரு வேலைக்காரப் பெண் நெருப்பு வெளிச்சத்திலே கண்டாள். அவள் அவனை உற்றுப்பார்த்து, “இவன் இயேசுவோடு இருந்தான்” என்றாள். ஆனால் பேதுருவோ, “பெண்ணே, அவரை எனக்குத் தெரியாது” என்று மறுதலித்தான். சிறிது நேரத்திற்குப் பின்பு, வேறொருவன் பேதுருவைக் கண்டு, “நீயும் அவர்களில் ஒருவன் தான்” என்றான். அதற்குப் பேதுரு, “இல்லையப்பா, நான் அல்ல” என்றான். ஏறக்குறைய ஒருமணி நேரத்திற்குப் பின்பு இன்னொருவன், “நிச்சயமாகவே, இவனும் இயேசுவுடனே இருந்தான். ஏனெனில் இவன் கலிலேயன்” என்றான். அதற்குப் பேதுரு, “மனிதனே நீ என்னப் பேசுகிறாய் என்றே எனக்குத் தெரியாது” என்றான். அவன் அப்படிச் சொல்லிக்கொண்டிருக்கையில், சேவல் கூவிற்று. அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நேருக்கு நேராய் பார்த்தார். உடனே, “இன்று சேவல் கூவுவதற்கு முன்னே, நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய்” என்று கர்த்தர் சொன்ன வார்த்தை, பேதுருவுக்கு ஞாபகம் வந்தது. அவன் வெளியே போய் மனங்கசந்து அழுதான். இயேசுவைக் காவல் செய்துகொண்டிருந்தவர்கள், அவரை ஏளனம் செய்யவும், அடிக்கவும் தொடங்கினார்கள். அவர்கள் இயேசுவினுடைய கண்களைக் கட்டிவிட்டு, “உன்னை அடித்தது யார் என்று, ஞானதிருஷ்டியினால் சொல்” என்று வற்புறுத்திக் கேட்டார்கள். அவர்கள் இன்னும் அதிகமாய் ஏளனம் செய்தார்கள். பொழுது விடிந்தபோது, யூதரின் தலைவர்களின் குழுவும், தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும் ஒன்றாய் கூடிவந்தார்கள். இயேசு அவர்களுக்கு முன்பாக ஆலோசனைச் சங்கத்திற்குக்கொண்டு வரப்பட்டார். அவர்கள் இயேசுவிடம், “நீ கிறிஸ்துதான் என்றால், அதை எங்களுக்குச் சொல்” என்றார்கள். இயேசு அதற்குப் பதிலாக, நான் உங்களுக்குச் சொன்னாலும், நீங்கள் அதை விசுவாசிக்கமாட்டீர்கள். நான் உங்களிடம் கேள்வி கேட்டாலும், நீங்கள் அதற்குப் பதில் சொல்லமாட்டீர்கள். ஆனால் இப்போதிலிருந்தே, வல்லமையுள்ள இறைவனுடைய வலதுபக்கத்தில் மானிடமகனாகிய நான் அமர்ந்திருப்பேன் என்றார். அப்பொழுது அவர்கள் எல்லோரும் இயேசுவிடம், “அப்படியானால், நீ இறைவனின் மகனோ?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் பதிலாக, “நான் அவர்தான் என்று நீங்களே சொல்லுகிறீர்களே” என்றார். அப்பொழுது அவர்கள், “இனியும் நமக்குச் சாட்சி தேவையா? அவனுடைய வாயிலிருந்தே அதை நாம் கேட்டோமே” என்றார்கள்.

லூக்கா 22:47-71 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்