லூக்கா 20:27-47

லூக்கா 20:27-47 TCV

இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை என்று சொல்லும் சதுசேயரில் சிலர், இயேசுவிடம் ஒரு கேள்வியுடன் வந்தார்கள். அவர்கள் அவரிடம், “போதகரே, ஒருவன் பிள்ளை இல்லாதவனாகத் தன் மனைவியை விட்டுவிட்டு இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அந்த விதவையைத் திருமணம் செய்து, இறந்துபோன தன் சகோதரனுக்கு மகப்பேறு அளிக்கட்டும் என்று, மோசே எங்களுக்கு எழுதி வைத்திருக்கிறார். ஏழு சகோதரர் இருந்தார்கள்; மூத்தவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, பிள்ளைகள் இல்லாதவனாய் இறந்துபோனான். இரண்டாவது சகோதரனும், பின் மூன்றாவது சகோதரனுமாக, முறையே அவளைத் திருமணம் செய்து, பிள்ளைகள் இல்லாதவர்களாக இறந்துபோனார்கள். அப்படியே, ஏழு சகோதரர்களும் அவளைத் திருமணம் செய்து, பிள்ளைகள் இல்லாமல் இறந்துபோனார்கள். கடைசியாக, அந்தப் பெண்ணும் இறந்துபோனாள். அப்படியானால், இறந்தவர்கள் உயிருடன் எழுந்திருக்கும்போது, அவள் யாருக்கு மனைவியாய் இருப்பாள்? ஏழு சகோதரர்களும் அவளைத் திருமணம் செய்தார்களே” என்றார்கள். இயேசு அதற்கு அவர்களிடம், “இந்த வாழ்விலே மக்கள் திருமணம் செய்கிறார்கள், திருமணம் செய்து கொடுக்கப்படுகிறார்கள். ஆனால் வரப்போகும் வாழ்விலும், இறந்தோரின் உயிர்த்தெழுதலிலும் இடம்பெறத் தகுதியுள்ளவர்களாய் எண்ணப்படுகிறவர்களோ, திருமணம் செய்வதும் இல்லை, திருமணம் செய்துகொடுப்பதும் இல்லை. அவர்களால் இறந்து போகவும் முடியாது; ஏனெனில், அவர்கள் இறைவனின் தூதர்களுக்கு ஒப்பாயிருப்பார்கள். அவர்கள் உயிர்த்தெழுதலுக்குரிய பிள்ளைகளாயிருப்பதால், அவர்கள் இறைவனின் பிள்ளைகள். இறந்தோர் உயிர்த்தெழுகிறார்கள் என்ற உண்மையை, மோசேயும் முட்புதரைப்பற்றிய சம்பவத்திலே குறிப்பிட்டுச் சொல்கிறார். ஏனெனில், மோசே கர்த்தரை ஆபிரகாமின் இறைவன் என்றும், ஈசாக்கின் இறைவன் என்றும், யாக்கோபின் இறைவன் என்றும் அழைக்கிறார். அவர் இறந்தவர்களின் இறைவன் அல்ல, உயிர் உள்ளவர்களின் இறைவனே. ஏனெனில், அவரைப் பொறுத்தமட்டில், எல்லோரும் உயிருள்ளவர்களே” என்றார். மோசேயின் சட்ட ஆசிரியரில் சிலர், “போதகரே, நன்றாகச் சொன்னீர்” என்றார்கள். அதற்குப் பின்பு, ஒருவரும் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கத் துணியவில்லை. இயேசு அவர்களிடம், “கிறிஸ்து தாவீதின் மகன் என்று சொல்கிறார்களே, அது எப்படி? சங்கீதப் புத்தகத்தில் தாவீது தானே: “ ‘கர்த்தர் என் கர்த்தரிடம் சொன்னதாவது: “நான் உமது பகைவரை உமது கால்களுக்கு பாதபடி ஆக்கும்வரை நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும்.” ’ தாவீது அவரைக் கர்த்தர் என்று அழைத்தான். அப்படியானால், கிறிஸ்து எப்படி அவனுக்கு மகனாய் இருக்கமுடியும்?” என்றார். மக்கள் எல்லோரும் அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது இயேசு தமது சீடர்களிடம், “மோசேயின் சட்ட ஆசிரியர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் நீண்ட அங்கிகளை அணிந்துகொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வாழ்த்துக்களைப் பெறவும் விரும்புகிறார்கள். அவர்கள் ஜெப ஆலயங்களில் மிக முக்கியமான இருக்கைகளையும், விருந்துகளில் மதிப்புக்குரிய இடங்களையும் பெற விரும்புகிறார்கள். அவர்கள் விதவைகளின் வீடுகளை அபகரித்துக் கொண்டும் மற்றும் பிறர் காணவேண்டும் என்பதற்காக நெடுநேரம் மன்றாடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் மிகக்கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.

லூக்கா 20:27-47 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்