யோசுவா 14:6-12

யோசுவா 14:6-12 TCV

யூதா மனிதர் கில்காலில் இருக்கும் யோசுவாவிடம் வந்தார்கள். அப்பொழுது கேனாசியனான எப்புன்னேயின் மகனாகிய காலேப் யோசுவாவிடம், “காதேஸ் பர்னேயாவில் யெகோவா என்னையும் உம்மையும் குறித்து இறைவனின் மனிதனாகிய மோசேயிடம் கூறியதை நீர் நன்கு அறிவீர். காதேஸ் பர்னேயாவிலிருந்து யெகோவாவின் அடியானாகிய மோசே, கானான் நாட்டைப் பார்த்துவரும்படி என்னை அனுப்பியபோது, எனக்கு நாற்பது வயதாய் இருந்தது. என் மனதில் சரியெனத் தென்பட்டதின்படி மோசேயிடம் ஒரு அறிக்கை கொண்டுவந்தேன். ஆனால் என்னுடன் வந்த என் சகோதரர்கள் இஸ்ரயேலரின் உள்ளங்களை பயத்தினால் கலங்கப்பண்ணினார்கள். நானோ என் இறைவனாகிய யெகோவாவை மனப்பூர்வமாய்ப் பின்பற்றினேன். அப்படியே, ‘நீ உன் இறைவனாகிய யெகோவாவை மனப்பூர்வமாய்ப் பின்பற்றியபடியால், நீ காலடி வைத்த இடம் முழுவதும் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றென்றுமுள்ள சொத்துரிமை நிலமாக இருக்கும்’ என்று மோசே அந்நாளில் வாக்குறுதி அளித்தான். “யெகோவா இவற்றை மோசேக்கு வாக்களித்ததிலிருந்து இன்றுவரை நாற்பத்தைந்து ஆண்டுகள் என்னை உயிருடன் வைத்திருக்கிறார். அக்காலத்தில் இஸ்ரயேலர் பாலைவனத்தில் அலைந்து திரிந்தார்கள். இப்பொழுது எனக்கு எண்பத்தைந்து வயது. அன்று மோசே என்னை அனுப்பியபோது இருந்ததுபோலவே இன்றும் நான் பெலனுடையவனாய் இருக்கிறேன். அன்று இருந்ததுபோலவே இன்றும் போருக்குப் போகத்தக்க வல்லமையுடையவனாயும் இருக்கிறேன். எனவே யெகோவா அந்த நாளில் எனக்குக் கொடுப்பதாக வாக்களித்த அந்த மலைநாட்டை இப்பொழுது எனக்குத் தாரும். ஏனாக்கியர் அங்கே வசிக்கிறார்களென்றும், அவர்களுடைய பட்டணங்கள் பெரிய அரண்களுடைய பட்டணங்களென்றும் நீர் கேள்விப்பட்டிருக்கிறீர். யெகோவா சொன்னபடியே அவருடைய உதவியுடன் நான் அவர்களைத் துரத்திவிடுவேன்” என்றான்.