யோயேல் 2:2-14
யோயேல் 2:2-14 TCV
அது இருளும் காரிருளும் கலந்த நாள், மப்பும் மந்தாரமும் நிறைந்த நாள். விடியற்காலை வெளிச்சம் மலைகளின்மீது பரவுவதுபோல் வலிமைமிக்க வெட்டுக்கிளிகளின் பெரும் படையொன்று வருகிறது! இதுபோன்ற படை முற்காலத்தில் இருந்ததுமில்லை, வரப்போகும் காலங்களில் இருக்கப் போவதுமில்லை. அவற்றிற்கு முன்னாக நெருப்பு சுட்டெரிக்கும், அவற்றிற்கு பின்னாக நெருப்புப் பற்றியெரியும். அவற்றிற்கு முன்னாக நாடு ஏதேன் தோட்டத்தைப் போலவும், அவற்றிற்குப் பின்னாக நாடு பாழான பாலைவனம் போலவும் இருக்கிறது; அவற்றிலிருந்து தப்புவது எதுவுமேயில்லை. அவை குதிரைகளின் தோற்றமுடையவை; அவை குதிரைப் படைபோல் பாய்ந்தோடுகின்றன. தேர்களின் இரைச்சலைப் போன்ற சத்தத்துடனும், காய்ந்த சருகுகளை எரிக்கும்போது எழும்பும் சத்தத்துடனும், யுத்தத்திற்கு அணிவகுக்கும் வலிமைமிக்க படையைப்போல் அவை மலைமேல் பாய்ந்து வருகின்றன. அவைகளைக் கண்டதும் நாடுகள் நடுங்கும்; பயத்தால் எல்லாருடைய முகங்களும் வெளிறிப்போகும். வெட்டுக்கிளிகள் இராணுவவீரரைப்போல் தாவி ஓடுகின்றன; அவை போர் வீரரைப்போல் மதில்களில் ஏறுகின்றன. அவை தங்கள் பாதையிலிருந்து விலகாமல் நேராய் அணிவகுத்துச் செல்கின்றன. அவை ஒன்றையொன்று இடித்துக்கொள்ளாமல் ஒவ்வொன்றும் தன் வழிதவறாமல் செல்கின்றன. அணிவகுப்பைக் குலைக்காமல் போராயுதங்களை இடித்து முன்னேறுகின்றன. அவை நகரத்தை நோக்கி விரைகின்றன; மதில்கள்மேல் ஓடுகின்றன. வீடுகளுக்குள் ஏறுகின்றன; அவை திருடர்களைப்போல் ஜன்னல் வழியே நுழைகின்றன. அவற்றின் முன்பாக பூமி அதிருகிறது, வானம் அசைகிறது. சூரியனும் சந்திரனும் இருளடைகின்றன, நட்சத்திரங்கள் ஒளிகொடாதிருக்கின்றன. யெகோவா தமது படையின் முன்னின்று முழக்கமிடுகிறார்; அவருடைய பாளையம் மிகப்பெரியது, அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறதற்கு வலிமைமிக்கது. யெகோவாவின் நாள் பெரிதும் பயங்கரமுமானது. அதை யாரால் சகிக்கமுடியும்? ஆகையால், “இப்பொழுதேனும் நீங்கள் உபவாசித்து, அழுது புலம்பி, உங்கள் முழுமனதுடன் என்னிடம் திரும்புங்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். உங்கள் உடைகளையல்ல, உங்கள் உள்ளத்தையே கிழியுங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் திரும்புங்கள்; ஏனெனில் அவர் கிருபையும் கருணையும் உள்ளவர், கோபிக்கத் தாமதிக்கிறவர், அன்பு நிறைந்தவர்; பேரழிவை அனுப்பாமல் மனம் மாறுகிறவர். யாருக்குத் தெரியும்? ஒருவேளை அவர் மனமாறி, அனுதாபங்கொண்டு, உங்களுக்குத் தனது ஆசீர்வாதத்தையும் தரக்கூடும். அப்பொழுது உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்காக தானிய காணிக்கையையும் பானகாணிக்கையையும் நீங்கள் கொண்டுவரலாம்.


