யோபு 5:17-27

யோபு 5:17-27 TCV

“இறைவனால் திருத்தப்படுகிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்; எனவே எல்லாம் வல்லவரின் கண்டிப்பை நீ அசட்டை பண்ணாதே. அவர் காயப்படுத்திக் காயத்தைக் கட்டுகிறார்; அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது. ஆறு பெரும் துன்பங்களிலும் உன்னைக் கைவிடாமல் காப்பார்; அவை ஏழானாலும் ஒரு தீமையும் உன்மேல் வராது. பஞ்சத்தில் சாவிலிருந்தும் யுத்தத்தின் வாளுக்கு இரையாகாமலும் விலக்கிக் காப்பார். தூற்றும் நாவிலிருந்து நீ பாதுகாக்கப்படுவாய்; பேராபத்து வரும்போதும் நீ பயப்படாமலிருப்பாய். அழிவையும் பஞ்சத்தையும் கண்டு நீ சிரிப்பாய்; நீ பூமியிலுள்ள காட்டு மிருகங்களுக்கும் பயப்பட வேண்டியதில்லை. வயல்வெளியின் கற்களுடன் நீ ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வாய், காட்டு விலங்குகளும் உன்னுடன் சமாதானமாய் இருக்கும். உன் கூடாரம் பாதுகாக்கப்பட்டிருப்பதை நீ அறிவாய்; உன் உடைமைகளைக் கணக்கெடுக்கும்போது ஒன்றும் குறைவுபடாதிருப்பதையும் நீ காண்பாய். உன் பிள்ளைகள் அநேகராய் இருப்பார்கள் என்பதை நீ அறிவாய். உன் சந்ததிகள் பூமியின் புற்களைப்போல் இருப்பார்கள். ஏற்றகாலத்தில் தானியக்கதிர்கள் ஒன்று சேர்க்கப்படுவதுபோல், உன் முதிர்வயதிலே நீ கல்லறைக்குப் போவாய். “நாங்கள் ஆராய்ந்து பார்த்ததில் இவை உண்மை என்று கண்டோம். நீ இவற்றைக் கேட்டு, உனக்கும் இவை பொருந்தும் என்று எடுத்துக்கொள்.”