ஏசாயா 7:10-16

ஏசாயா 7:10-16 TCV

மீண்டும் யெகோவா ஆகாஸிடம் பேசி, “இறைவனாகிய உன் யெகோவாவிடம் கடலின் ஆழத்திலிருந்தோ, உன்னதத்தின் உயரத்திலிருந்தோ அடையாளம் ஒன்றைக் கேள்” என்றார். ஆனால் ஆகாஸோ, “நான் கேட்கமாட்டேன், யெகோவாவை நான் பரீட்சை செய்யமாட்டேன்” என்றான். அப்பொழுது ஏசாயா, “தாவீதின் குடும்பத்தாரே, இப்பொழுது கேளுங்கள்! மனிதனின் பொறுமையைச் சோதித்தது போதாதோ? என் இறைவனின் பொறுமையையும் சோதிக்கப் போகிறீர்களோ? ஆகவே யெகோவா தாமே உங்களுக்கு வருங்காலத்தின் அடையாளம் ஒன்றைக் கொடுப்பார்: ஒரு கன்னிப்பெண் கர்ப்பவதியாகி, ஒரு மகனைப் பெறுவாள். அவரை இம்மானுயேல் என அழைப்பார்கள். தீயதைத் தவிர்த்து நல்லதைத் தெரிந்துகொள்ள அறிவு வரும்போது, அவர் தேனும் தயிரும் சாப்பிடுவார். அந்தப் பிள்ளைக்கு தீயதை விலக்கி, நல்லதைத் தெரிவுசெய்வதற்கு போதிய அறிவு வருமுன்னே, நீ பயப்படுகிற அந்த இரண்டு அரசர்களின் நாடு பாழாக்கிவிடப்படும்.