ஏசாயா 7:1-9

ஏசாயா 7:1-9 TCV

உசியாவின் பேரனும், யோதாமின் மகனுமான ஆகாஸ், யூதாவிலே அரசனாய் இருந்தான். அப்பொழுது, சீரிய அரசன் ரேத்சீனும், இஸ்ரயேல் அரசன் ரெமலியாவின் மகன் பெக்காவும் எருசலேமுக்கு எதிராகப் படையெடுத்து வந்தனர். ஆனால் அதை அவர்களால் கைப்பற்ற முடியவில்லை. “எப்பிராயீமியருடன் சீரியா கூட்டணி அமைத்திருக்கிறது” என்ற செய்தி தாவீதின் குடும்பத்தாருக்குச் சொல்லப்பட்டது. காற்றினால் காட்டு மரங்கள் அதிர்வது போல், ஆகாஸ் அரசனின் இருதயமும் மக்களின் இருதயமும் பயத்தால் நடுங்கின. அப்பொழுது யெகோவா ஏசாயாவிடம், “நீயும் உன் மகன் செயார் யாசுபும் ஆகாஸ் அரசனைச் சந்திக்கப் போங்கள்; வண்ணான் தோட்டத்திற்குப் போகும் தெருவின் பக்கத்திலுள்ள மேற்குளத்தின் கால்வாய் முடிவில் அவனைக் காண்பீர்கள். அவனிடம் சொல்லவேண்டியதாவது: ‘பயப்படாதே, குழப்பமடையாமல் கவனமாய் இரு. புகையும் கொள்ளிகளாகிய இந்த சீரியருடன் சேர்ந்த ரேத்சீனினதும், ரெமலியாவின் மகன் பெக்காவினதும் கடுங்கோபத்தினிமித்தம் மனந்தளராதே! ஏனெனில் அவர்கள் இருவரும் வெறும் புகையுங்கொள்ளிகளே. சீரியர், எப்பிராயீமுடனும் ரெமலியாவின் மகனுடனும் சேர்ந்து, உனது அழிவுக்காகச் சதி செய்திருக்கிறார்கள். அவர்கள், “நாம் யூதாவின்மேல் படையெடுத்து, அதைப்பிடித்து எங்களுக்கிடையில் பங்கிட்டு, தாபயேலின் மகனை அங்கு அரசனாக நியமிப்போம்” என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே: “ ‘அது அப்படி நடக்கப்போவதுமில்லை, அது நிறைவேறப்போவதுமில்லை. ஏனெனில், தமஸ்கு சீரியாவின் தலைநகராயிருக்கிறது; ரேத்சீன் மட்டுமே தமஸ்குவில் அரசனாயிருக்கிறான். இன்னும் அறுபத்தைந்து வருடங்களில் எப்பிராயீம் ஒரு மக்கள் கூட்டமாயிராதபடி சிதறடிக்கப்படும். சமாரியா எப்பிராயீமுக்குத் தலைநகராய் இருக்கிறது, ரெமலியாவின் மகன் மட்டுமே சமாரியாவில் தலைவனாயிருக்கிறான். நீங்களோ உங்கள் நம்பிக்கையில் உறுதியாயிராவிட்டால், நிலையற்றுப் போவீர்கள்.’ ”