எஸ்றா 3:8-13

எஸ்றா 3:8-13 TCV

அவர்கள் எருசலேமுக்கு இறைவனின் ஆலயத்திற்கு வந்த இரண்டாம் வருடம் இரண்டாம் மாதத்திலே வேலையை ஆரம்பித்தார்கள். செயல்தியேலின் மகன் செருபாபேலும், யோசதாக்கின் மகன் யெசுவாவும், மீதமுள்ள அவர்களுடைய சகோதரர்களான ஆசாரியரும், லேவியர்களும், மற்றும் நாடு கடத்தப்பட்டிருந்து எருசலேமுக்குத் திரும்பி வந்த இஸ்ரயேல் மக்கள் எல்லோரும் இதில் ஈடுபட்டார்கள். இருபது வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடைய லேவியர்கள் யெகோவாவின் ஆலயம் கட்டும் வேலையை மேற்பார்வை செய்தார்கள். பின்பு யெசுவா தனது மகன்களுடனும், சகோதரர்களுடனும், கத்மியேலுடனும், அவன் மகன்களுடனும், யூதாவின் மகன்களுடனும், லேவியர்களான எனாதாத்தின் மகன்களுடனும், ஒன்றுசேர்ந்து இறைவனின் ஆலய வேலைகளைச் செய்யும் மனிதர்களை மேற்பார்வை செய்தனர். ஆலயத்தைக் கட்டுகிறவர்கள் யெகோவாவின் ஆலயத்திற்கு அஸ்திபாரம் போட்டு முடித்தபோது, ஆசாரியர்கள் தங்களுக்குரிய உடையை உடுத்தி எக்காளங்களுடன் நின்றார்கள். ஆசாபின் மகன்களான லேவியர்கள் கைத்தாளங்களுடன் நின்றார்கள். இவர்கள் எல்லோரும் இஸ்ரயேலின் அரசன் தாவீது உரைத்தபடியே யெகோவாவைத் துதிக்கும்படி நின்றார்கள். அவர்கள் யெகோவாவுக்குத் துதியும், நன்றியும் செலுத்திப் பாட்டு பாடினார்கள். அவர்கள்: “அவர் நல்லவர்; இஸ்ரயேலின்மேல் அவர் வைத்திருக்கும் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று பாடினார்கள். மக்கள் எல்லோரும் யெகோவாவின் ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்பட்டதால் உரத்த சத்தமாய் யெகோவாவைத் துதித்தார்கள். இருந்தும், முன்பிருந்த ஆலயத்தைக் கண்ட முதியவர்களான ஆசாரியரும், லேவியர்களும், குடும்பத்தலைவர்களும் அதை நினைவுகூர்ந்து இப்போது கட்டிய ஆலயத்தின் அஸ்திபாரத்தைக் கண்டபோது, மிகவும் சத்தமாய் அழுதார்கள். அவ்வேளையில் வேறுசிலர் மகிழ்ச்சியினால் சத்தமிட்டார்கள். மக்கள் அதிக சத்தமிட்டதால் அழுகையின் சத்தத்திலிருந்து மகிழ்ச்சியின் சத்தத்தை பகுத்தறிய ஒருவராலும் முடியவில்லை. சத்தமோ அதிக தூரத்திற்குக் கேட்டது.