யாத்திராகமம் 18:13-23

யாத்திராகமம் 18:13-23 TCV

மறுநாள் மோசே இஸ்ரயேலரின் நீதிபதியாகப் பணிசெய்ய தனது இருக்கையில் உட்கார்ந்தான். காலையிலிருந்து, மாலைவரை மக்கள் மோசேயைச் சுற்றி நின்றார்கள். மோசே இஸ்ரயேலருக்குச் செய்யும் எல்லாவற்றையும் கண்ட மோசேயின் மாமன் அவனிடம், “மக்களுக்கு நீ செய்யும் காரியம் என்ன? மக்கள் காலைமுதல் மாலைவரை உன்னைச் சுற்றி நிற்க நீ ஏன் தனியாக நீதிபதியாய் இருக்கிறாய்?” என்று கேட்டான். அதற்கு மோசே தன் மாமனிடம், “மக்கள் தங்கள் பிரச்சனைக்கு இறைவனின் திட்டத்தை அறிந்துகொள்ளவே என்னிடம் வருகிறார்கள். அவர்களுக்குள் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால், அதை என்னிடத்தில் கொண்டுவருகிறார்கள். அப்பொழுது நான் இரு பகுதியினருக்கும் இடையில் நியாயந்தீர்த்து இறைவனின் விதிமுறைகளையும், அவருடைய சட்டங்களையும் அவர்களுக்குத் தெரிவிப்பேன்” என்றான். அதற்கு மோசேயின் மாமன், “நீ செய்வது நல்லதல்ல; இப்படிச் செய்வதினால் நீயும், உன்னிடத்தில்வரும் இந்த மக்களும் களைத்துச் சோர்ந்து போவீர்கள். இந்த வேலை உனக்கு மிகவும் கடினமானது. இதைத் தனியே செய்ய உன்னால் முடியாது. இப்பொழுது நான் சொல்வதைக் கேள். நான் உனக்கு சில புத்திமதிகளைச் சொல்வேன். இறைவன் உன்னோடு இருப்பாராக. நீ இறைவனுக்கு முன்பாக இந்த மக்களின் பிரதிநிதியாக இருந்து, அவர்களுடைய வழக்குகளை அவரிடம் கொண்டுபோக வேண்டும். நீ அவர்களுக்கு இறைவனின் விதிமுறைகளையும், சட்டங்களையும் போதிக்கவேண்டும். அவர்கள் வாழவேண்டிய வழியையும், அவர்கள் செய்யவேண்டிய கடமைகளையும் அவர்களுக்குக் காட்டவேண்டும். ஆகவே இஸ்ரயேலருக்குள் திறமையுள்ள மனிதரைத் தெரிந்தெடுத்து, அவர்களை ஆயிரம்பேருக்கும், நூறுபேருக்கும், ஐம்பதுபேருக்கும், பத்துப்பேருக்கும் மேலாக அதிகாரிகளாக நியமிக்கவேண்டும். இவர்கள் இறைவனுக்குப் பயப்படுகிறவர்களாகவும், நீதியற்ற ஆதாயத்தை வெறுக்கிற நம்பத்தகுந்தவர்களாகவும் இருக்கவேண்டும். இவர்களை எல்லா வேளைகளிலும் மக்களுக்கு நீதிபதிகளாக பணிசெய்யும்படி ஏற்படுத்து. ஆனால் ஒவ்வொரு கஷ்டமான வழக்குகளையும் அவர்கள் உன்னிடத்தில் கொண்டுவர ஏற்பாடு செய்யவேண்டும். இலகுவான வழக்குகளை அவர்கள் தாங்களே நியாயந்தீர்க்கலாம். அவர்கள் உன்னோடு உன் பொறுப்பைப் பகிர்ந்து கொள்வதால் உனது சுமை இலகுவாகும். இறைவன் கட்டளையிடுகிறவிதமாக இதை நீ செய்தால், அந்த வேலைப்பளுவை உன்னால் சமாளிக்க முடியும். இந்த மக்களும் திருப்தியுடன் தங்கள் வீடுகளுக்குப் போவார்கள்” என்றான்.