எபேசியர் 4:14-19

எபேசியர் 4:14-19 TCV

அப்பொழுது நாம் தொடர்ந்து குழந்தைத்தனமுள்ளவர்களாய் இருக்கமாட்டோம். காற்றினாலும் அலைகளினாலும் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்படுவதுபோல், மனிதரின் வெவ்வேறு புதுப்புது போதனைகளினால், நாமும் அலைக்கழிக்கப்படமாட்டோம். மனிதரின் தந்திரமும் கபடமுமுள்ள ஏமாற்றும் சூழ்ச்சியில் இழுபடவுமாட்டோம். மாறாக அன்புடனே உண்மையைப் பேசுகிறவர்களாய், எல்லாவகையிலும் நம் தலைவராயிருக்கிற கிறிஸ்துவுக்குள் வளர்ச்சியடைவோம். அவராலேயே முழு உடலும், இணைக்கும் மூட்டுகளினால் ஒன்றிணைக்கப்பட்டு, வளர்ச்சியடைந்து அவை ஒவ்வொன்றும் தங்களுக்கு குறிக்கப்பட்ட வேலையைச் செய்வதால் அன்பில் பெருகுகிறது. எனவே கர்த்தரில் நான் இதை உங்களுக்கு வலியுறுத்தி சொல்கிறதாவது: நீங்கள் தொடர்ந்து யூதரல்லாதவர்களைப்போல, அவர்களின் பயனற்ற சிந்தனையில் வாழக்கூடாது. அவர்கள் விளங்கிக்கொள்வதில் மந்தமுள்ளவர்களாயும், இறைவனின் வாழ்விலிருந்து பிரிக்கப்பட்டவர்களாயும் வாழ்கிறார்கள்; இது அவர்களுடைய இருதயக்கடினத்தினால் ஏற்பட்ட அறிவீனத்தினால் நடக்கிறது. அவர்கள் முற்றிலும் உணர்வற்றவர்களாகி, தங்களைச் சிற்றின்பங்களுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள். இதனால் எல்லாவித அசுத்தமான செயல்களையும் செய்து, காம வேட்கையில் தொடர்ந்து ஈடுபட ஆசைப்படுகிறார்கள்.