பிரசங்கி 8:14-17
பிரசங்கி 8:14-17 TCV
மேலும் பூமியில் நிகழ்கின்ற வேறு ஒரு அர்த்தமற்ற காரியமும் உண்டு: கொடியவர்களுக்கு வரவேண்டியது, நீதிமான்களுக்கு வருகிறது. நீதிமான்களுக்கு வரவேண்டியது, கொடியவர்களுக்கு வருகிறது. இதுவும் அர்த்தமற்றது என்றே நான் சொல்வேன். எனவே நான் வாழ்க்கையில் இன்பமாயிருக்கச் சொல்கிறேன்; ஏனெனில் சூரியனுக்குக் கீழே மனிதனுக்கு சாப்பிட்டு, குடித்து, சந்தோஷமாய் இருப்பதைத் தவிர வேறு எந்த நன்மையும் இல்லை. அப்பொழுது சூரியனுக்குக் கீழே இறைவன் அவனுக்குக் கொடுத்திருக்கிற வாழ்நாளெல்லாம், அவனுடைய வேலையில் மகிழ்ச்சியிருக்கும். நான் ஞானத்தை அடையவும், மனிதன் இரவு பகல் நித்திரையின்றி பூமியில் செய்யும் கடின உழைப்பைக் கவனிப்பதற்கும் முயன்றபோது, இறைவன் செய்த எல்லாவற்றையும் நான் கண்டேன். சூரியனுக்குக் கீழே நடப்பதை ஒருவனாலும் விளங்கிக்கொள்ள முடியாது. அதை அறிய முயற்சித்தாலும், அவனால் அதின் அர்த்தத்தைக் கண்டுபிடிக்க முடியாது. ஞானமுள்ள ஒருவன் தனக்குத் தெரியும் என்று சொன்னாலும் உண்மையாகவே அவனால் அதை விளங்கிக்கொள்ள முடியாது.

