தானியேலாகிய நான் இத்தரிசனத்தைக் கவனித்துப் பார்த்து, அதை விளங்கிக்கொள்ள முயற்சி செய்துகொண்டிருந்தேன். அங்கே எனக்கு முன்பாக ஒருவர் நின்றார். அவர் ஒரு மனிதனைப்போல் இருந்தார். பின் ஊலாய் என்னும் கால்வாயின் மறுபக்கத்திலிருந்து, ஒரு மனித குரல், “காபிரியேலே, இந்தத் தரிசனத்தின் விளக்கத்தை இந்த மனிதனுக்குத் தெரியப்படுத்து எனச் சொல்லக்கேட்டேன்.” எனவே அவர் நான் நின்ற இடத்தை நோக்கி நெருங்கி வந்தார். அப்போது நான் பயத்தினால் முகங்குப்புற கீழே விழுந்தேன். அவர் என்னிடம், “மனுபுத்திரனே, இத்தரிசனம் முடிவு காலத்தைப்பற்றியது என்பதை விளங்கிக்கொள் என்றார்.” அவர் என்னிடம் பேசிக்கொண்டிருக்கையில் நான் கீழே விழுந்து ஆழ்ந்த நித்திரையில் இருந்தேன். அப்போது அவர் என்னைத் தொட்டு, தூக்கி, காலூன்றி நிற்கச்செய்தார். பின்பு அவர் என்னிடம், “பிற்காலத்தில் கடுங்கோபத்தின் நாட்களில் என்ன சம்பவிக்கப் போகிறதென்பதை நான் சொல்லப்போகிறேன். ஏனெனில் அந்தத் தரிசனம் நியமிக்கப்பட்ட முடிவு காலத்தைப்பற்றியது என்றார்.” நீ கண்ட இரண்டு கொம்புகளுடைய செம்மறியாட்டுக் கடா மேதிய, பெர்சியரின் அரசர்களைக் குறிக்கிறது. அந்த மயிர் நிறைந்த வெள்ளாட்டுக்கடா, முதல் கிரேக்க அரசனாகும். அதன் கண்களுக்கிடையில் இருந்த பெரிய கொம்பு முதலாவது அரசனாகும். முறிந்துபோன கொம்பு இருந்த இடத்தில் முளைத்த அந்த நான்கு கொம்புகளும், அவனுடைய நாட்டில் இருந்து எழும்பப்போகும் நான்கு அரசுகளாகும். ஆனால் அதே வல்லமை இவற்றிற்கு இராது. அவர்களுடைய ஆட்சியின் பிற்பகுதியில் கலகக்காரர் முற்றிலும் கொடியவர்களாவார்கள். அப்போது, கொடூரமான ஒரு அரசன் தோன்றுவான். அவன் சூழ்ச்சியில் வல்லவனாயிருப்பான். அவன் மிகவும் வலிமையுடையவனாவான், ஆயினும் தனது சொந்த வல்லமையினாலல்ல. அவன் பிரமிக்கத்தக்க அழிவுகளைச்செய்து, தான் செய்பவற்றிலெல்லாம் வெற்றியடைவான். அவன் வலிமை வாய்ந்தவர்களையும், பரிசுத்த மக்களையும் அழிப்பான். இவ்வாறு அவன் வஞ்சனையை செழிக்கப்பண்ணி, தன்னை மிக உயர்ந்தவனாகக் கருதுவான். பலர் தாங்கள் பாதுகாப்பாய் இருப்பதாக எண்ணும்போது, அவர்களைக் கொலைசெய்வான். அவன் இளவரசருக்கெல்லாம் இளவரசராய் இருப்பவருக்கு எதிர்த்து நிற்பான். ஆயினும் அவன் அழிக்கப்படுவான். ஆனால், மனித வல்லமையினால் அல்ல. “உனக்குக் கொடுக்கப்பட்ட இரண்டாயிரத்து முந்நூறு மாலை, காலை தரிசனத்தின் விளக்கம் உண்மையானது. ஆயினும், இந்தத் தரிசனத்தை முத்திரையிடு. ஏனெனில் இது வெகுகாலத்திற்குப் பின் நடக்கப்போவதைப்பற்றியது எனச் சொன்னார்.” அதன்பின் தானியேலாகிய நான் இளைப்படைந்து அநேக நாட்கள் நோயுற்றிருந்தேன். பின் நான் எழுந்து அரசனின் அலுவல்களைக் கவனிக்கப்போனேன். ஆனால் அந்தத் தரிசனத்தில் கண்டவற்றால் திகைப்படைந்திருந்தேன். அது விளங்கிக்கொள்ளும் ஆற்றலுக்கு அப்பாற்பட்டது.
வாசிக்கவும் தானியேல் 8
கேளுங்கள் தானியேல் 8
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: தானியேல் 8:15-27
30 நாட்கள்
டேனியல் புத்தகம் கடவுளை நம்பிய ஒரு மனிதனின் சுயசரிதை மற்றும் இறுதியில் உலகை ஆளப்போவது யார் என்பது பற்றிய தீர்க்கதரிசன பார்வை. ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் டேனியல் மூலம் தினசரி பயணம் செய்யுங்கள்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்