தானியேல் 3:22-30

தானியேல் 3:22-30 TCV

அரசனின் கட்டளை அவசரமானதாயிருந்ததாலும் சூளையோ மிகவும் சூடாயிருந்ததாலும் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரைக் கொண்டுசென்ற வீரர்களையோ நெருப்பு ஜூவாலை எரித்துப்போட்டது. அதேவேளை இம்மூவரும் உறுதியாகக் கட்டுண்டவர்களாய் பற்றியெரியும் நெருப்புச்சூளைக்குள் விழுந்தார்கள். அப்பொழுது அதைப் பார்த்துக்கொண்டிருந்த நேபுகாத்நேச்சார் அரசன் ஆச்சரியத்துடன் துள்ளி எழுந்து, தனது ஆலோசகர்களிடம், “நாம் மூவரைத்தானே கட்டி நெருப்புச்சூளையில் போட்டோம் எனக் கேட்டான்?” அதற்கு அவர்கள், “நிச்சயமாக! ஆம் அரசே!” என்றார்கள். அவன், “இதோ பாருங்கள், நான்கு மனிதர்கள் நெருப்பிலே நடந்து திரிகிறதைக் காண்கிறேன். அவர்கள் கட்டப்படாதவர்களாயும், எதுவித சேதமும் இன்றியும் இருக்கிறார்கள். நான்காவது ஆள், பார்ப்பதற்கு தெய்வங்களின் மகன் போலிருக்கிறானே என்றான்.” அப்பொழுது நேபுகாத்நேச்சார் சுவாலித்து எரிகிற சூளையின் வாயில் அருகே நெருங்கிப்போய், “சாத்ராக்கே, மேஷாக்கே, ஆபேத்நேகோவே, மகா உன்னதமான இறைவனின் அடியவர்களே, உடனே வெளியேறுங்கள்; இங்கே வாருங்கள்” என்று சத்தமிட்டான். அப்படியே சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் நெருப்பிலிருந்து வெளியே வந்தார்கள். அப்பொழுது சிற்றரசர்களும், நிர்வாக அதிகாரிகளும், ஆளுநர்களும், அரச ஆலோசகர்களும் அவர்களைச் சுற்றி நெருங்கி வந்தார்கள். நெருப்போ அவர்களுடைய உடலுக்கு ஒரு தீங்குகூட விளைவிக்காமலும், தலைமயிர் கருகாமலும் இருப்பதைக் கண்டார்கள். அவர்களுடைய மேலுடைகள் எரியவும் இல்லை. அவர்கள்மேல் நெருப்பின் புகை வாடையும் இருக்கவில்லை. அப்பொழுது நேபுகாத்நேச்சார் சொன்னதாவது: “தமது தூதனை அனுப்பி, தமது அடியவர்களை விடுவித்த சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரின் இறைவனுக்குத் துதி உண்டாவதாக. அவர்கள் தங்கள் இறைவனில் நம்பிக்கை வைத்து அரச கட்டளைகளுக்கு எதிர்த்து நின்றார்கள். தங்கள் இறைவனைத்தவிர வேறு தெய்வத்தை வணங்காமலும், பணிந்துகொள்ளாமலும் இருந்து, தங்கள் உயிரைக் கொடுக்கவும் ஆயத்தமாயிருந்தார்களே. ஆகவே சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களின் இறைவனுக்கு எதிராக எதையாவது கூறும் எந்த மக்களும், எந்த மொழி பேசுவோரும் துண்டுதுண்டாக வெட்டிக் கொலைசெய்யப்படுவர். அவர்களுடைய வீடுகளும் இடிபாடுகளின் குவியலாக்கப்படும். இது எனது உறுதியான கட்டளை. ஏனெனில், வேறு எந்த தெய்வத்தினாலும் இவ்விதமாகக் காப்பாற்ற முடியாது என்றான்.” அதன்பின்பு சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கு அரசன், பாபிலோன் மாகாணத்தில் பதவி உயர்வு கொடுத்தான்.