அப்போஸ்தலர் 9:10-18

அப்போஸ்தலர் 9:10-18 TCV

தமஸ்குவிலே, அனனியா என்னும் பெயருடைய ஒரு சீடன் இருந்தான். கர்த்தர் தரிசனத்தில் அவனைக் கூப்பிட்டு, “அனனியா!” என்றார். அதற்கு அவன், “ஆண்டவரே, இதோ அடியேன்!” என்றான். அப்பொழுது கர்த்தர் அவனிடம், “நீ நேர்த்தெரு எனப்பட்ட தெருவிலிருக்கிற யூதாவின் வீட்டிற்குப்போய், அங்கே தர்சுவைச் சேர்ந்த சவுல் என்னும் பெயருடைய ஒருவனைப்பற்றி விசாரி. அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான். அவன் அனனியா என்னும் பெயருடைய ஒருவன் தன்னிடம் வந்து, பார்வையடையும்படி தன்மேல் கைகளை வைப்பதாகவும் தரிசனத்திலே கண்டிருக்கிறான்” என்றார். அப்பொழுது அனனியா, “ஆண்டவரே, நான் இவனைப்பற்றி அநேக செய்திகளைக் கேள்விப்பட்டிருக்கிறேன். எருசலேமிலே அவன் உமது பரிசுத்தவான்களுக்குச் செய்த எல்லாத் தீமைகளையும் கேள்விப்பட்டிருக்கிறேன். உமது பெயரை அறிக்கையிடுகிற எல்லோரையும் கைதுசெய்வதற்குப் பிரதான ஆசாரியனிடமிருந்து அதிகாரம் பெற்றவனாய் அவன் இங்கே வந்திருக்கிறான்” என்றான். ஆனால் அதற்குக் கர்த்தர் அனனியாவிடம், “நீ போ, இவன் என்னால் தெரிந்துகொள்ளப்பட்ட ஒரு கருவி. யூதரல்லாதவர்களுக்கும், அவர்களின் அரசர்களுக்கு முன்பாகவும் இஸ்ரயேல் மக்களுக்கு முன்பாகவும் என் பெயரை அறிவிப்பதற்காக, நான் அவனைத் தெரிந்தெடுத்திருக்கிறேன். எனது பெயருக்காக அவன் எவ்வளவாய் துன்பம் அனுபவிக்கவேண்டும் என்று நான் அவனுக்குக் காண்பிப்பேன்” என்றார். அப்பொழுது அனனியா, அந்த வீட்டை அடைந்து, அதற்குள் போனான். அவன் சவுலின்மேல் தன் கைகளை வைத்து, “சகோதரனாகிய சவுலே, நீ இங்கே வருகையில் வழியிலே உனக்குத் தரிசனம் கொடுத்த கர்த்தராகிய இயேசு என்னை உன்னிடம் அனுப்பியிருக்கிறார்; நீ மீண்டும் பார்வை பெறும்படியாகவும், பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படும்படியாகவுமே அவர் என்னை அனுப்பினார்” என்றான். உடனேயே சவுலின் கண்களிலிருந்து மீன் செதில்கள் போன்ற ஏதோ விழுந்தன. அப்பொழுது அவனால் பார்க்கமுடிந்தது. அவன் எழுந்திருந்து திருமுழுக்கு பெற்றான்.