அப்போஸ்தலர் 5:1-21

அப்போஸ்தலர் 5:1-21 TCV

அனனியா என்னும் பெயருடைய ஒருவன், தனது மனைவி சப்பீராளுடன் சேர்ந்து, ஒரு சிறு நிலத்தை விற்றான். விற்ற பணத்தில் ஒரு பகுதியைத் தனது மனைவி அறியத் தனக்கென வைத்துக்கொண்டு, மறு பகுதியைக் கொண்டுவந்து முழுவதையும் கொடுப்பதுபோல, அப்போஸ்தலரின் பாதத்தில் வைத்தான். அப்பொழுது பேதுரு அவனிடம், “அனனியாவே, பரிசுத்த ஆவியானவரிடம் பொய் சொல்லும்படி, சாத்தான் உனது இருதயத்தை நிரப்பியது எப்படி? நிலத்தை விற்றுப் பெற்றுக்கொண்ட பணத்தில் ஒரு பகுதியை நீ உனக்கென வைத்துக்கொண்டாயே. அதை விற்குமுன்பு அது உனக்குச் சொந்தமாக இருக்கவில்லையோ? அது விற்கப்பட்ட பின்பும், அந்தப் பணம் உன்னிடம் இருக்கவில்லையோ? இப்படிப்பட்ட ஒரு செயலைச் செய்ய நீ ஏன் நினைத்தாய்? நீ மனிதரிடம் பொய் சொல்லவில்லை, இறைவனிடமே பொய் சொன்னாய்” என்றான். அனனியா இதைக் கேட்டபோது, அவன் கீழே விழுந்து இறந்துப்போனான். நடந்ததைக் கேள்விப்பட்ட எல்லோருக்கும் மிகவும் பயமுண்டாயிற்று. அப்பொழுது இளைஞர் முன்வந்து, அவனது உடலைத் துணியில் சுற்றி, தூக்கிக்கொண்டுபோய் அடக்கம் செய்தார்கள். கிட்டத்தட்ட மூன்றுமணி நேரத்திற்குப்பின், நடந்தது என்ன என்று அறியாமல், அவனுடைய மனைவி உள்ளே வந்தாள். பேதுரு அவளிடம், “நிலத்தை விற்று நீயும் அனனியாவும் பெற்றுக்கொண்ட பணம் இவ்வளவுதானா?” என்று கேட்டான். அதற்கு அவள், “ஆம், இவ்வளவுதான் அதன் விலை” என்றாள். அப்பொழுது பேதுரு அவளிடம், “கர்த்தருடைய ஆவியானவரைச் சோதிப்பதற்கு எப்படி நீயும் உடன்பட்டாய்? இதோ, உனது கணவனை அடக்கம் செய்தவர்கள் வாசற்படியிலே நிற்கின்றனர். அவர்கள் உன்னையும் சுமந்துகொண்டு போவார்கள்” என்றான். அந்த வினாடியே அவளும் பேதுருவின் பாதத்தில் விழுந்து செத்துப்போனாள். அப்பொழுது அந்த இளைஞர் உள்ளே வந்து, அவள் இறந்துகிடப்பதைக் கண்டு, அவளையும் வெளியே தூக்கிக்கொண்டுபோய் அவளது கணவனுக்குப் பக்கத்தில் அடக்கம் செய்தார்கள். திருச்சபையோருக்கும் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டவர்கள் எல்லோருக்கும் மிகவும் பயம் ஏற்பட்டது. அப்போஸ்தலர் அநேக அற்புத அடையாளங்களையும், அதிசயங்களையும் மக்களிடையே செய்தார்கள். விசுவாசிகள் அனைவரும் சாலொமோனுடைய மண்டபத்தில் கூட்டம் கூடுவது வழக்கமாயிருந்தது. மக்கள் அவர்களை உயர்வாய் மதித்தபோதிலும், வேறு யாரும் அவர்களோடு சேரத் துணியவில்லை. ஆனால் அதிகமதிகமாய் ஆண்களும் பெண்களும் கர்த்தர்மேல் விசுவாசம் வைத்து, அவர்களின் எண்ணிக்கையுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். அதன் பலனாக, மக்கள் தங்களுள் வியாதிப்பட்டிருந்தவர்களை வீதிகளுக்குக் கொண்டுவந்து, அவர்களைக் கட்டில்கள்மேலும் பாய்கள்மேலும் கிடத்தினார்கள். பேதுரு நடந்துபோகையில், அவனுடைய நிழலாகிலும் படும்படிக்கே இப்படிச் செய்தார்கள். எருசலேமைச் சுற்றியிருந்த பட்டணங்களிலிருந்துங்கூட, மக்கள் பெருங்கூட்டமாய் வந்தார்கள். அவர்கள் தங்களில் வியாதிப்பட்டவர்களையும் தீய ஆவியினால் துன்புறுத்தப்பட்டவர்களையும் கொண்டுவந்தார்கள்; அவர்கள் அனைவரும் சுகமடைந்தார்கள். அப்பொழுது பிரதான ஆசாரியனும், சதுசேயர் குழுவைச் சேர்ந்த அவனுடைய கூட்டாளிகள் அனைவரும் பொறாமையால் நிறைந்து, அப்போஸ்தலரைக் கைதுசெய்து, பொதுச் சிறைச்சாலையில் அடைத்தார்கள். ஆனால் அந்த இரவில், கர்த்தருடைய தூதன் அந்தச் சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து, அவர்களை வெளியே கொண்டுவந்தான். அவன் அவர்களிடம், “நீங்கள் போய் ஆலய முற்றத்தில் நின்று, இந்த ஜீவ வார்த்தைகள் எல்லாவற்றையும் மக்களுக்குச் சொல்லுங்கள்” என்றான். அதிகாலையிலேயே, அவர்கள் தங்களுக்குச் சொல்லப்பட்டபடியே, ஆலய முற்றத்திற்குள் போய் மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்கள். பிரதான ஆசாரியனும் அவனுடன் இருந்தவர்களும் அங்கே வந்து சேர்ந்தபோது, அவர்கள் ஆலோசனைச் சங்கத்தை, அதாவது இஸ்ரயேல் மக்களின் எல்லா யூதரின் தலைவர்களையும் ஒன்றுகூட்டி, சிறையிலிருந்து அப்போஸ்தலரைக் கொண்டுவரும்படி ஆட்களை அனுப்பினார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்