அப்போஸ்தலர் 2:1-24

அப்போஸ்தலர் 2:1-24 TCV

பெந்தெகொஸ்தே நாள் வந்தபோது, அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். அப்பொழுது திடீரென பலத்த காற்று வீசுவதுபோன்ற ஒரு முழக்கம் பரத்திலிருந்து வந்து, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அவர்கள் நெருப்புப்போன்ற பிரிந்திருக்கும் நாவுகளைக் கண்டார்கள். அவை அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தன. அவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டார்கள். ஆவியானவர் கொடுத்த ஆற்றலின்படி, ஒவ்வொருவரும் வெவ்வேறு மொழிகளிலே பேசத் தொடங்கினார்கள். அப்பொழுது இறைவனிடம் பயபக்தியாயிருந்த யூதர்கள் வானத்தின் கீழுள்ள ஒவ்வொரு நாடுகளிலிருந்தும் வந்து எருசலேமில் தங்கியிருந்தார்கள். அவர்கள் இந்த சத்தத்தைக் கேட்டபோது, பெருங்கூட்டமாய் அங்கே வந்தார்கள். தங்களுடைய சொந்த மொழிகளில் அவர்கள் ஒவ்வொருவரும் பேசுவதைக் கேட்டு வியப்படைந்தார்கள். அவர்கள் முற்றுமாய் வியப்படைந்து, “இங்கு பேசிக்கொண்டிருக்கிற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? அப்படியிருக்க, இவர்கள் நமது சொந்த மொழிகளில் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்கிறோமே, அது எப்படி? பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா, பம்பிலியா, எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும், சிரேனே அருகேயுள்ள லீபியாவின் சில பகுதிகளிலுள்ளவர்களும், ரோமிலிருந்து வந்தவர்களும் இங்கிருக்கிறார்களே. இன்னும் யூதரும், யூத விசுவாசத்திற்கு வந்தவர்களும் இருக்கிறார்களே! அத்துடன் கிரேத்தரும், அரபியரும் ஆகிய நாம் நம் மொழிகளிலே இறைவனின் அதிசயங்களை இவர்கள் அறிவிப்பதைக் கேட்கிறோமே!” என்றார்கள். அவர்கள் வியப்பும் குழப்பமும் அடைந்தவர்களாய், ஒருவரையொருவர் பார்த்து, “இதன் அர்த்தம் என்ன?” என்றார்கள். ஆனால் சிலர், அவர்களைக்குறித்து கேலிசெய்து, “இவர்கள் மதுபானத்தை நிறைய குடித்திருக்கிறார்கள்” என்றார்கள். அப்பொழுது பேதுரு மற்ற பதினொரு பேருடனும் எழுந்து நின்று, உரத்த சத்தமாய் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசத் தொடங்கினான்: “யூதமக்களே, எருசலேமில் வாழுகிறவர்களே, உங்கள் எல்லோருக்கும் நான் இதை விளக்கிச் சொல்லுகிறேன்; நான் சொல்வதைக் கவனமாய் கேளுங்கள். நீங்கள் நினைப்பதுபோல இவர்கள் குடிவெறி கொண்டவர்கள் அல்ல. நேரமோ இன்னும் காலை ஒன்பது மணிதானே! இறைவாக்கினன் யோவேலினால் கூறப்பட்டபடி இது நிறைவேறுகிறது: “ ‘இறைவன் சொல்லியபடி, கடைசி நாட்களில், நான் எல்லா மக்கள்மேலும் என் ஆவியானவரைப் பொழிவேன். உங்கள் மகன்களும் மகள்களும் இறைவாக்கு உரைப்பார்கள், உங்கள் இளைஞர் தரிசனங்களைக் காண்பார்கள், உங்கள் முதியவர்கள் கனவுகளைக் காண்பார்கள். மேலும் அந்நாட்களில் நான், எனது ஊழியக்காரர்கள்மேலும் ஊழியக்காரிகள்மேலும், என் ஆவியைப் பொழிவேன். அப்பொழுது அவர்கள் இறைவாக்கு உரைப்பார்கள். உயரே வானத்தில் நான் அதிசயங்களைக் காண்பிப்பேன், கீழே பூமியில் அடையாளங்களாக இரத்தத்தையும், நெருப்பையும், புகை மண்டலங்களையும் காண்பிப்பேன். பெரிதும் மகிமையானதுமான கர்த்தரின் நாள் வருமுன்பே, சூரியன் இருண்டுபோகும்; சந்திரன் இரத்தமாக மாறும். கர்த்தரின் பெயரைச் சொல்லி கூப்பிடுகிற யாவரும் இரட்சிக்கப்படுவார்கள்.’ “இஸ்ரயேலரே, இதைக் கேளுங்கள்: நீங்கள் அறிந்திருக்கிறபடி, இறைவன் உங்கள் மத்தியில் நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவின் மூலமாக செய்த அற்புதங்கள், அதிசயங்கள், அடையாளங்களினால் அவர் இறைவனால் அங்கீகாரம் பெற்ற மனிதர் என்பதை நிரூபித்தார். இறைவன் தாம் தீர்மானித்திருந்த நோக்கத்தின்படியும், தமது முன்னறிவின்படியும், அவர் அந்த இயேசுவை உங்களிடம் ஒப்படைத்தார். நீங்களோ கொடியவர்களின் உதவியோடு, அவரைச் சிலுவையில் ஆணி அடித்துக் கொலைசெய்தீர்கள். ஆனால் இறைவனோ, மரணத்தின் வேதனையிலிருந்து இயேசுவை விடுவித்து, அவரை உயிரோடு எழுப்பினார். ஏனெனில், மரணத்தினால் அவரைப் பிடித்து வைத்திருக்க முடியவில்லை.