2 தீமோத்தேயு 2
2
புதுப்பிக்கப்பட்ட வேண்டுதல்
1ஆகையால் என் மகனே, நீ கிறிஸ்து இயேசுவில் இருக்கும் கிருபையிலே பெலன்கொள். 2அநேக சாட்சிகளுக்கு முன்னால் நான் போதித்தவற்றை நீ கேட்டறிந்தாய். இவற்றை மற்றவர்களுக்குக் போதிக்கத் திறமையுள்ளவர்களான நம்பத்தகுந்த மனிதரிடம் ஒப்புவி. 3கிறிஸ்து இயேசுவின் நல்ல போர்வீரனைப்போல், என்னுடனேகூட துன்பங்களைத் தாங்கிக்கொள். 4போர்வீரனாக பணிசெய்யும் யாரும், பொது வாழ்க்கை விவகாரங்களில் ஈடுபடமாட்டான். அவன் தனது அதிகாரியையே பிரியப்படுத்த விரும்புகிறான். 5அதேபோல் யாரும், விளையாட்டு வீரனாக போட்டியில் ஈடுபடும்போது, அவன் ஒழுங்குமுறையின்படி விளையாடாவிட்டால், வெற்றி வீரனுக்குரிய கிரீடத்தைப் பெற்றுக்கொள்ளமாட்டான். 6கஷ்டப்பட்டு வேலைசெய்யும் விவசாயியே விளைச்சலின் பங்கை முதலில் பெறவேண்டும். 7நான் சொல்வதைச் சிந்தித்துப்பார் ஏனெனில் இவை எல்லாவற்றிலும் கர்த்தர் உனக்கு நுண்ணறிவைத் தருவாராக.
8இயேசுகிறிஸ்துவை நினைவிற்கொள். அவர் மரித்தோரிலிருந்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் தாவீதின் சந்ததியில் வந்தவர். இதுவே எனது நற்செய்தி. 9இதற்காகவே நான் குற்றவாளியைப்போல் விலங்கிடப்படும் அளவுக்கு துன்பப்படுகிறேன். ஆனால் இறைவனின் வார்த்தையோ விலங்கிடப்படவில்லை. 10ஆகையால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்காக, நான் எல்லாவற்றையும் சகிக்கிறேன். அவர்கள் கிறிஸ்து இயேசுவில் இருக்கும் இந்த இரட்சிப்பை நித்திய மகிமையுடன் பெற்றுக்கொள்ளும்படியே நான் இவற்றைச் சகிக்கிறேன்.
11இதுவும் நம்பத்தகுந்த ஒரு வாக்கு:
நாம் கிறிஸ்துவுடன் மரித்திருந்தால்,
நாமும் அவருடன் வாழ்வோம்.
12நாம் பாடுகளைத் தாங்கினால்,
நாமும் அவருடன் ஆளுகை செய்வோம்.
நாம் கிறிஸ்துவை மறுதலித்தால்,
அவரும் நம்மை மறுதலிப்பார்;
13நாம் அவருக்கு உண்மையாய் இராவிட்டாலும்,
அவர் நமக்கு உண்மையுள்ளவராகவே இருப்பார். ஏனெனில்,
அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்.
இறைவனுக்கேற்ற வேலையாள்
14இந்தக் காரியங்களை அவர்களுக்கு நினைப்பூட்டி, வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாமென்று இறைவனுக்கு முன்பாக, அவர்களை எச்சரிக்கை செய். அப்படிப்பட்ட வாக்குவாதமோ கேட்கிறவர்களைப் பாழாக்குமேயன்றி, அதனால் வேறு ஒரு பயனும் இல்லை. 15நீயோ ஏற்றுக்கொள்ளப்பட்ட வேலையாளாக இறைவனுக்குமுன் நிற்பதற்கு, உன்னால் இயன்ற எல்லா முயற்சியையும்செய்; வெட்கப்படாத வேலையாளாகவும், சத்தியத்தின் வார்த்தையை சரியாக கடைப்பிடிக்கிறவனாகவும் இருக்க முயற்சிசெய். 16பக்தியில்லாத பேச்சை விட்டுவிலகு. ஏனெனில் அதில் ஈடுபடுகிறவர்கள், இன்னும் அதிகதிகமாய் இறைவனை மறுதலிக்கிறவர்களாவார்கள். 17அவர்களுடைய போதனை புற்றுநோயைப்போல் பரவும். அவர்களுக்குள் இமெனேயும், பிலேத்தும் அப்படிப்பட்டவர்களாய் இருக்கிறார்கள். 18அவர்கள் சத்தியத்தைவிட்டு விலகிப் போய்விட்டார்கள். உயிர்த்தெழுதல் ஏற்கெனவே நடந்துவிட்டது என அவர்கள் சொல்லி சிலரின் விசுவாசத்தை அழித்துவிட்டார்கள். 19அப்படியிருந்தும், இறைவனின் உறுதியான அஸ்திபாரம் நிலைத்து நிற்கிறது: “தன்னுடையவர்களை கர்த்தர் அறிவார்” என்றும், “கர்த்தரின் பெயரை அறிக்கையிடுகிற ஒவ்வொருவரும், அநீதியான செயல்களிலிருந்து கட்டாயமாக விலகவேண்டும்” என்றும் அதில் முத்திரையாகப் பொறிக்கப்பட்டுள்ளன.
20ஒரு பெரிய வீட்டில் தங்கத்தினாலும் வெள்ளியினாலும் செய்யப்பட்ட பாத்திரங்கள் மட்டுமல்ல, மரத்தினாலும் களிமண்ணினாலும் செய்யப்பட்ட பாத்திரங்களும் உண்டு. அவற்றில் சில சிறப்பான நோக்கத்திற்காகவும், சில சாதாரணமாகவும் உபயோகிக்கப்படுகின்றன. 21ஒரு மனிதன் மதிப்பற்ற காரியங்களிலிருந்து சுத்திகரிக்கப்படுவானாகில், அவன் மதிப்புக்குரிய நோக்கங்களுக்கு ஏற்ற கருவியாவான். அவன் பரிசுத்தமாக்கப்பட்டு, எஜமானுக்கு உகந்தவனாகவும், எந்த நல்ல செயல்களைச் செய்வதற்கும் ஆயத்தம் பண்ணப்பட்டவனாகவும் இருப்பான்.
22வாலிப பருவத்தின் தீமையான ஆசைகளைவிட்டு ஓடி, சுத்த இருதயத்துடன் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவோருடன் சேர்ந்து நீதி, விசுவாசம், அன்பு, சமாதானம் ஆகியவற்றை நாடித்தேடு. 23மதிகேடும் அறிவற்றதுமான விவாதங்களில் கலந்து கொள்ளாதே. ஏனெனில், அவை வாக்குவாதங்களையே உண்டுபண்ணுகின்றவை என்பது உனக்குத் தெரியும். 24கர்த்தரின் ஊழியக்காரன் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. ஆனால் அவன் எல்லோரிடமும் தயவுள்ளவனாக, போதிக்கும் திறமையுள்ளவனாக, சகிப்புத்தன்மை உள்ளவனாக இருக்கவேண்டும். 25அவன் தன்னை எதிர்க்கிறவர்களை இறைவன் அவர்களுக்கு மனந்திரும்புதலைக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்புடன், கனிவாக அறிவுறுத்தவேண்டும். இந்த மனந்திரும்புதல் சத்தியத்தின் அறிவுக்கு அவர்களை வழிநடத்தி, 26அவர்களைத் தெளிந்த புத்தியுள்ளவர்களாக்கும். எனவே, பிசாசு தனது திட்டத்தைத் செய்ய, இவர்களை சிறைப்பிடித்திருக்கிற கண்ணியிலிருந்து அவர்கள் தப்பித்துக்கொள்வார்கள்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
2 தீமோத்தேயு 2: TCV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.