1 சாமுயேல் 17:40-47
1 சாமுயேல் 17:40-47 TCV
பின்பு தாவீது கையில் தன் மேய்ப்பனின் கோலை எடுத்துக்கொண்டு நீரோடையிலிருந்த ஐந்து கூழாங்கற்களைத் தெரிந்தெடுத்து மேய்ப்பருக்குரிய பையில் போட்டு, கவணையும் கையில் பிடித்துக்கொண்டு பெலிஸ்தியனை அணுகினான். அப்பொழுது அந்த பெலிஸ்தியன் தாவீதை நோக்கி வந்துகொண்டிருந்தான். கேடயம் பிடிப்பவன் அவனுக்கு முன்னால் நடந்து வந்தான். அந்தப் பெலிஸ்தியன் தாவீதை நன்றாகப் பார்த்து, அவன் ஒரு சிறுவன் மட்டுமே என்றும், சிவந்த உடலுடையவனும், அழகுள்ளவனும் என்று கண்டு அவனை அலட்சியம் செய்தான். அவன் தாவீதிடம், “நீ தடிகளுடன் என்னிடம் வருவதற்கு நான் என்ன ஒரு நாயா?” என்று கேட்டுத் தன் தெய்வங்களின் பெயரைச் சொல்லித் தாவீதைச் சபித்தான். மேலும் அவன் தாவீதிடம், “என்னிடத்தில் இங்கே வா; உன் மாமிசத்தை ஆகாயத்துப் பறவைகளுக்கும், வெளியின் மிருகங்களுக்கும் கொடுப்பேன்” என்றான். அதற்குத் தாவீது பெலிஸ்தியனிடம், “நீ வாளோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னை எதிர்த்து வருகிறாய். ஆனால் நானோ, நீ எதிர்த்த இஸ்ரயேல் படைகளின் இறைவனான சேனைகளின் யெகோவாவின் பெயரிலேயே உன்னை எதிர்த்து வருகிறேன். இன்று யெகோவா உன்னை என் கையில் ஒப்படைப்பார். நான் உன்னை அடித்து வீழ்த்தி, உன் தலையை வெட்டிப்போடுவேன். இன்று பெலிஸ்திய படைகளின் பிணங்களை ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் கொடுப்பேன். இதனால் இஸ்ரயேலில் ஒரு இறைவன் இருக்கிறாரென்பதை முழு உலகமும் அறிந்துகொள்ளும். அத்துடன், யெகோவா வாளாலும், ஈட்டியாலும் விடுவிப்பவரல்ல என்பதை இங்கு கூடியிருக்கும் கூட்டமும் அறிந்துகொள்வார்கள். இந்த யுத்தம் யெகோவாவினுடையது. எனவே உங்கள் அனைவரையும் அவர் எங்கள் கைகளில் ஒப்படைப்பார்” என்றான்.



