நீதி 9:1-9

நீதி 9:1-9 IRVTAM

ஞானம் தன்னுடைய வீட்டைக் கட்டி, தன்னுடைய செதுக்கப்பட்ட ஏழு தூண்களையும் அமைத்து, தன்னுடைய கொழுத்த மிருகங்களை அடித்து, திராட்சைரசத்தை ஊற்றிவைத்து, தன்னுடைய உணவுப்பந்தியை ஆயத்தப்படுத்தி, தன்னுடைய பணிவிடைக்காரிகளை அனுப்பி, பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின்மேல் நின்று கூப்பிட்டு, புத்தியீனனை நோக்கி: எவன் பேதையோ அவன் இந்த இடத்திற்கு வரட்டும். நீங்கள் வந்து என்னுடைய அப்பத்தைச் சாப்பிட்டு, நான் ஊற்றிய திராட்சைரசத்தைக் குடியுங்கள். பேதமையைவிட்டு விலகுங்கள், அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று சொல்லுகிறது. பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் அவமானமடைகிறான்; துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான். பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்; ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான். ஞானமுள்ளவனுக்குப் போதி, அவன் ஞானத்தில் தேறுவான்; நீதிமானுக்கு உபதேசம் செய், அவன் அறிவில் விருத்தியடைவான்.