நீதி 4:10-19

நீதி 4:10-19 IRVTAM

என் மகனே, கேள், என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன்னுடைய ஆயுளின் வருடங்கள் அதிகமாகும். ஞானவழியை நான் உனக்குப் போதித்தேன்; செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன். நீ அவைகளில் நடக்கும்போது உன்னுடைய நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை; நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய். புத்திமதியை உறுதியாகப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு உயிர். துன்மார்க்கர்களுடைய பாதையில் நுழையாதே; தீயோர்களுடைய வழியில் நடக்காதே. அதை வெறுத்துவிடு, அதின் வழியாகப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்துபோ. தீங்கு செய்யாமல் அவர்களுக்கு தூக்கம் வராது; அவர்கள் யாரையாவது விழச்செய்யாமல் இருந்தால் அவர்களுடைய தூக்கம் கலைந்துபோகும். அவர்கள் துன்மார்க்கத்தின் அப்பத்தைச் சாப்பிட்டு, கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள். நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாகப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போல இருக்கும். துன்மார்க்கர்களுடைய பாதையோ காரிருளைப்போல இருக்கும்; தாங்கள் எதினால் இடறுகிறோம் என்பதை அறியமாட்டார்கள்.