எண் 14:1-9
எண் 14:1-9 IRVTAM
அப்பொழுது சபையார் எல்லோரும் கூக்குரலிட்டுப் புலம்பினார்கள்; மக்கள் அன்று இரவுமுழுதும் அழுதுகொண்டிருந்தார்கள். இஸ்ரவேல் மக்கள் எல்லோரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். சபையார் எல்லோரும் அவர்களை நோக்கி: “எகிப்துதேசத்திலே செத்துப்போனோமானால் நலமாக இருக்கும்; இந்த வனாந்திரத்திலே நாங்கள் செத்தாலும் நலம். நாங்கள் பட்டயத்தால் மடியும்படியும், எங்களுடைய மனைவிகளும் பிள்ளைகளும் கொள்ளையாகும்படியும், யெகோவா எங்களை இந்த தேசத்திற்குக் கொண்டு வந்தது என்ன? எகிப்திற்குத் திரும்பிப் போகிறதே எங்களுக்கு உத்தமம் அல்லவோ” என்றார்கள். பின்பு அவர்கள்: “நாம் ஒரு தலைவனை ஏற்படுத்திக்கொண்டு எகிப்திற்குத் திரும்பிப்போவோம் வாருங்கள்” என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் மக்களின் சபையாராகிய எல்லாக் கூட்டத்தாருக்கு முன்பாகவும் முகங்குப்புற விழுந்தார்கள். தேசத்தைச் சுற்றிப்பார்த்தவர்களில் நூனின் மகனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் மகனாகிய காலேபும், தங்களுடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, இஸ்ரவேல் மக்களின் முழு சபையையும் நோக்கி: “நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்ல தேசம். யெகோவா நம்மேல் பிரியமாக இருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார். யெகோவாவுக்கு விரோதமாகமட்டும் கலகம்செய்யாமலிருங்கள்; அந்த தேசத்தின் மக்களுக்கு நீங்கள் பயப்படவேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களை விட்டு விலகிப்போனது; யெகோவா நம்மோடு இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்படவேண்டியதில்லை” என்றார்கள்.

