மீகா 2:2-11

மீகா 2:2-11 IRVTAM

வயல்களை விரும்பி அவைகளைப் பறித்துக்கொண்டு, வீடுகளை விரும்பி அவைகளை எடுத்துக்கொண்டு, மனிதனையும் அவனுடைய வீட்டையும், குடும்பங்களையும் ஒடுக்குகிறவர்களுக்கு ஐயோ, ஆகையால் யெகோவா: நான் இந்த வம்சத்தாருக்கு விரோதமாகத் தீமையை வரச்செய்ய நினைக்கிறேன்; அதிலிருந்து நீங்கள் தப்பமாட்டீர்கள்; நீங்கள் மேட்டிமையாக நடப்பதில்லை; அது தீமையான காலம். அந்நாளில் உங்களை உதாரணமாகச்சொல்லி, நாம் முற்றிலும் பாழானோம்; நமது மக்களின் எல்லையை மாற்றிப்போட்டார்; எப்படியாக அதை என்னைவிட்டு நீக்கிப்போட்டார்! நமது வயல்களைப் பிடுங்கிப் பகிர்ந்துகொடுத்தாரே என்று துயரமான புலம்பலாகப் புலம்புவார்கள். யெகோவாவின் சபையில் நிலங்களை அளந்துகொடுக்கிறவர்கள் உனக்கு இல்லாதிருப்பார்கள். தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பீர்களாக என்கிறார்கள்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள், இந்தவிதமாக அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லாவிட்டால் பழிச்சொல் நீங்காதே. யாக்கோபு வம்சம் என்று பெயர் பெற்றவர்களே, யெகோவாவின் ஆவி குறுகியிருக்கிறதோ? அவருடைய செயல்கள் இவைகள்தானோ? செம்மையாக நடக்கிறவனுக்கு என் வார்த்தைகள் நன்மை செய்யாதோ? என் மக்கள் ஆரம்பம்முதல் எதிரியைப்போல் எழும்பினார்கள். போரிலிருந்து திரும்பிவந்து வழியில் பயப்படாமல் கடந்துபோகிறவர்களுடைய மேலங்கியையும் ஆடையையும் உரிந்துகொண்டீர்கள். என் மக்களின் பெண்களை அவர்களுடைய வசதியான வீடுகளிலிருந்து துரத்திவிட்டீர்கள்; அவர்களுடைய குழந்தைகளுக்கு இருந்த என் அலங்காரத்தை என்றைக்கும் இல்லாதபடிக்குப் பறித்துக்கொண்டீர்கள். எழுந்து போங்கள்; இது நீங்கள் இளைப்பாறும் இடம் அல்ல, இது தீட்டுப்பட்டது, இது உங்களை அழித்துவிடும், அந்த நாசம் மிகவும் கொடியதாக இருக்கும். மனம்போகிற போக்கிலே போய், பொய்யானதைச் சொல்லுகிற ஒருவன், திராட்சைரசத்தையும் மதுபானத்தையும் குறித்து நான் உனக்குப் பிரசங்கிப்பேனென்றால், அவனே இந்த மக்களுக்கு ஏற்ற பிரசங்கியாக இருப்பான்.