மத் 9:18-38

மத் 9:18-38 IRVTAM

அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, தலைவன் ஒருவன் வந்து அவரை வணங்கி: என் மகள் இப்பொழுதுதான் இறந்துபோனாள்; ஆனாலும், நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான். இயேசு எழுந்து, தம்முடைய சீடர்களோடுகூட அவன் பின்னே போனார். அப்பொழுது, பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினாலே கஷ்டப்படும் ஒரு பெண்: நான் அவருடைய ஆடையையாவது தொட்டால் சுகமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய ஆடையின் ஓரத்தைத் தொட்டாள். இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்தநேரத்திலேயே அந்தப் பெண் சுகமானாள். இயேசுவானவர் அந்தத் தலைவனுடைய வீட்டிற்கு வந்து, சங்கு ஊதுகிறவர்களையும், ஒப்பாரி வைக்கிற மக்களையும் கண்டு: விலகுங்கள், இந்த சிறுபெண் இறக்கவில்லை, தூங்கிக்கொண்டிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப் பார்த்து ஏளனம் செய்தார்கள். மக்கள் வெளியே அனுப்பப்பட்டப்பின்பு, அவர் உள்ளே பிரவேசித்து, அந்தச் சிறுபெண்ணின் கையைப் பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள். இந்தச் செய்தி அந்த நாடெங்கும் பிரசித்தமானது. இயேசு அந்த இடத்தைவிட்டுப் போகும்போது, இரண்டு குருடர்கள் அவருக்குப் பின்னேசென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள். அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர்கள் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: இதைச்செய்ய எனக்கு வல்லமை உண்டு என்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம் ஆண்டவரே! என்றார்கள். அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்களுடைய விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார். உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. இதை ஒருவரும் அறியாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள் என்று இயேசு அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார். அவர்களோ புறப்பட்டு, அந்த நாடெங்கும் அவருடைய புகழைப் பிரசித்தப்படுத்தினார்கள். அவர்கள் புறப்பட்டுப்போகும்போது, பிசாசு பிடித்த ஊமையான ஒரு மனிதனை அவரிடம் கொண்டுவந்தார்கள். பிசாசு துரத்தப்பட்டப்பின்பு ஊமையன் பேசினான். மக்கள் ஆச்சரியப்பட்டு: இஸ்ரவேலில் இப்படி ஒருபோதும் காணப்படவில்லை என்றார்கள். பரிசேயர்களோ: இவன் பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள். பின்பு, இயேசு எல்லாப் பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்து, மக்களுக்கு உண்டாயிருந்த எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கி, அவர்களைச் சுகமாக்கினார். அவர் திரளான மக்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல சோர்ந்துபோனவர்களும் திக்கற்றவர்களுமாக இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, தம்முடைய சீடர்களைப் பார்த்து: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்