மத் 8:23-34
மத் 8:23-34 IRVTAM
அவர் படகில் ஏறினபோது அவருடைய சீடர்கள் அவருக்குப் பின்னேசென்று ஏறினார்கள். அப்பொழுது படகு அலைகளினால் மூடப்படத்தக்கதாகக் கடலில் பெருங்காற்று உண்டானது. அவரோ தூங்கிக்கொண்டிருந்தார். அப்பொழுது, அவருடைய சீடர்கள் வந்து, அவரை எழுப்பி: ஆண்டவரே! எங்களைக் காப்பாற்றும், மரித்துப்போகிறோம் என்றார்கள். அதற்கு அவர்: விசுவாசக்குறைவுள்ளவர்களே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார், உடனே, மிகுந்த அமைதல் உண்டானது. அந்த மனிதர்கள் ஆச்சரியப்பட்டு: இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்றார்கள். அவர் அக்கரையிலே கெர்கெசேனர் நாட்டிற்கு வந்தபோது, பிசாசுகள் பிடித்திருந்த இரண்டுபேர் கல்லறைகளிலிருந்து புறப்பட்டு, அவருக்கு எதிராக வந்தார்கள்; அவர்கள் மிகவும் கொடியவர்களாக இருந்தபடியால், அந்தவழியாக ஒருவனும் நடக்கக்கூடாமலிருந்தது. அவர்கள் அவரைப் பார்த்து: இயேசுவே, தேவனுடைய குமாரனே, எங்களுக்கும் உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்று சத்தமிட்டார்கள். அவர்களுக்கு சிறிது தூரத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன. அப்பொழுது, பிசாசுகள்: நீர் எங்களைத் துரத்துவீரானால், நாங்கள் அந்தப் பன்றிகளுக்குள் போகும்படி அனுமதிகொடும் என்று அவரை வேண்டிக்கொண்டன. அதற்கு அவர்: போங்கள் என்றார். அவைகள் புறப்பட்டு, பன்றிகளுக்குள் சென்றன; அப்பொழுது, பன்றிக்கூட்டமெல்லாம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து தண்ணீரில் இறந்துபோயின. அவைகளை மேய்த்தவர்கள் ஓடி, பட்டணத்தில் சென்று, இந்தச் செய்திகள் எல்லாவற்றையும், பிசாசு பிடித்திருந்தவர்களுக்கு நடந்தவைகளையும் அறிவித்தார்கள். அப்பொழுது, அந்தப் பட்டணத்தார் அனைவரும் இயேசுவிற்கு எதிர்கொண்டுவந்து, அவரைக்கண்டு, தங்களுடைய எல்லைகளைவிட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள்.


