மத் 5:27-48

மத் 5:27-48 IRVTAM

விபசாரம் செய்யாதிருப்பாயாக என்பது முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு பெண்ணை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடு விபசாரம் செய்துவிட்டான். உன் வலது கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட, உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். உன் வலது கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட. உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். தன் மனைவியை விவாகரத்து செய்கிற எவனும், அவளுக்கு விடுதலைப்பத்திரம் கொடுக்கவேண்டும் என்று சொல்லப்பட்டது. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; வேசித்தனக் காரணத்தினாலொழிய தன் மனைவியை விவாகரத்து செய்கிறவன், அவளை விபசாரம்செய்யத் தூண்டுகிறவனாக இருப்பான்; அப்படி விவாகரத்து செய்யப்பட்டவளைத் திருமணம் செய்கிறவனும் விபசாரம் செய்கிறவனாக இருப்பான். அன்றியும், பொய்யாணையிடாமல், உன் ஆணைகளைக் கர்த்தர் முன்னிலையில் செலுத்துவாயாக என்று முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; எதையும் செய்வேன் என்று சத்தியம் செய்யவேண்டாம்; பரலோகத்தின்பேரில் சத்தியம் செய்யவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம். பூமியின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம், அது அவருடைய பாதபடி; எருசலேமின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம். உன் தலையின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம், அதின் ஒரு முடியையாவது வெண்மையாக்கவும் கருமையாக்கவும் உன்னால் முடியாதே. உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று, சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு. உன்னோடு வழக்காடி உன் ஆடையை எடுத்துக்கொள்ளவேண்டுமென்று விரும்புகிறவனுக்கு உன் மேலாடையையும் கொடுத்துவிடு. ஒருவன் உன்னை ஒரு மைல்தூரம் வரக் கட்டாயப்படுத்தினால், அவனோடுகூட இரண்டு மைல்தூரம் போ. உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே. உனக்கடுத்தவனைச் நேசித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்களுடைய சத்துருக்களை நேசியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவிற்குப் பிள்ளைகளாக இருப்பீர்கள்; அவர் தீயவர்கள்மேலும் நல்லவர்கள்மேலும் தமது சூரியனை உதிக்கச்செய்து, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். உங்களை நேசிக்கிறவர்களையே நீங்கள் நேசிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? வரி வசூலிப்பவர்களும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா? உங்களுடைய சகோதரர்களைமட்டும் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? வரி வசூலிப்பவர்களும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா? ஆகவே, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதா பூரண சற்குணராக இருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராக இருக்கக்கடவீர்கள்.

மத் 5:27-48 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்