மத் 23:1-22

மத் 23:1-22 IRVTAM

பின்பு இயேசு மக்களையும் தம்முடைய சீடர்களையும் பார்த்து: வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் மோசேயினுடைய இருக்கையில் உட்கார்ந்திருக்கிறார்கள்; ஆகவே, நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற எல்லாவற்றையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்களுடைய செய்கையின்படி செய்யாமலிருங்கள்; ஏனென்றால், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள். சுமக்கமுடியாத பாரமான சுமைகளைக் கட்டி மனிதர்களுடைய தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள். தங்களுடைய செயல்களையெல்லாம் மனிதர்கள் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்களுடைய காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்களுடைய ஆடைகளின் தொங்கல்களைப் பெரிதாக்கி, விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெப ஆலயங்களில் முதன்மையான இருக்கைகளையும், சந்தைவெளிகளில் வணக்கங்களையும், மனிதர்களால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள். நீங்களோ ரபீ என்று அழைக்கப்படாமலிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராக இருக்கிறார், நீங்கள் எல்லோரும் சகோதரர்களாக இருக்கிறீர்கள். பூமியிலே ஒருவனையும் உங்களுடைய பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாக இருக்கிறார். நீங்கள் போதகர் என்றும் அழைக்கப்படாமலிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராக இருக்கிறார். உங்களில் பெரியவனாக இருக்கிறவன் உங்களுக்கு வேலைக்காரனாக இருக்கவேண்டும். தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, மனிதர்கள் பிரவேசிக்கமுடியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப்போகிறவர்களை பிரவேசிக்கவிடுகிறதுமில்லை. மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்செய்து, விதவைகளின் வீடுகளை அழித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக தண்டனையை அடைவீர்கள். மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்களுடைய மதத்தானாக்கும்படி கடலையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்களுடைய மதத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாக நரகத்தின் மகனாக்குகிறீர்கள். குருடர்களான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ, எவனாவது தேவாலயத்தின்பேரில் சத்தியம்செய்தால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாவது தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்செய்தால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள். மதிகேடர்களே, குருடர்களே! எது முக்கியம்? பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ? மேலும், எவனாவது பலிபீடத்தின்பேரில் சத்தியம்செய்தால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாவது அதின்மேல் இருக்கிற காணிக்கையின்பேரில் சத்தியம்செய்தால், அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள். மதிகேடர்களே, குருடர்களே! எது முக்கியம்? காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ? ஆகவே, பலிபீடத்தின்பேரில் சத்தியம்செய்கிறவன் அதின்பேரிலும் அதின்மேலுள்ள எல்லாவற்றின்பேரிலும் சத்தியம்செய்கிறான். தேவாலயத்தின்பேரில் சத்தியம்செய்கிறவன் அதின்பேரிலும் அதில் வாசமாயிருக்கிறவர்பேரிலும் சத்தியம்செய்கிறான். பரலோகத்தின்பேரில் சத்தியம்செய்கிறவன் தேவனுடைய சிங்காசனத்தின்பேரிலும் அதில் வீற்றிருக்கிறவர்பேரிலும் சத்தியம்செய்கிறான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்