மத் 14:1-18
மத் 14:1-18 IRVTAM
அக்காலத்தில், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது இயேசுவின் புகழைக் கேள்விப்பட்டு, தன் வேலைக்காரர்களைப் பார்த்து: இவன் யோவான்ஸ்நானன்; இவன் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தான்; ஆகவே, இவனிடத்தில் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான். ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தம் யோவானைப் பிடித்துக் கட்டி சிறைச்சாலையில் வைத்திருந்தான். ஏனென்றால்: நீர் அவளை உன் மனைவியாக வைத்துக்கொள்வது நியாயமில்லை என்று யோவான் அவனுக்குச் சொல்லியிருந்தான். ஏரோது அவனைக் கொலைசெய்ய மனதாயிருந்தும், மக்கள் அவனைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தான். அப்படியிருக்க, ஏரோதின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறபோது, ஏரோதியாளின் மகள் அவர்கள் நடுவே நடனம்பண்ணி ஏரோதைச் சந்தோஷப்படுத்தினாள். அதினிமித்தம் ஏரோது: நீ எதைக்கேட்டாலும் தருவேன் என்று அவளுக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான். அவள் தன் தாயினால் சொல்லப்பட்டபடியே: யோவான்ஸ்நானனுடைய தலையை இங்கே ஒரு தட்டிலே வைத்து எனக்குத் தரவேண்டும் என்று கேட்டாள். ராஜா துக்கமடைந்தான். ஆனாலும், ஆணையினிமித்தமும், பந்தியில் கூட இருந்தவர்களினிமித்தமும், அதைக் கொடுக்கக்கட்டளையிட்டு, ஆள் அனுப்பி, சிறைச்சாலையிலே யோவானின் தலையை வெட்டச்செய்தான். அவனுடைய தலையை ஒரு தட்டிலே கொண்டுவந்து, சிறு பெண்ணுக்குக் கொடுத்தார்கள்; அவள் அதைத் தன் தாயினிடத்தில் கொண்டுபோனாள். அவனுடைய சீடர்கள் வந்து சரீரத்தை எடுத்து அடக்கம்செய்து, பின்புபோய் அந்தச் செய்தியை இயேசுவிற்கு அறிவித்தார்கள். இயேசு அதைக்கேட்டு, அந்த இடத்தைவிட்டு, படகில் ஏறி, வனாந்திரமான ஒரு இடத்திற்குத் தனியே போனார். மக்கள் அதைக் கேள்விப்பட்டு, பட்டணங்களிலிருந்து கால்நடையாக அவரிடத்திற்குப் போனார்கள். இயேசு வந்து, திரளான மக்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியுள்ளவர்களைச் சுகமாக்கினார். மாலைநேரமானபோது, அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்து: இது வனாந்திரமான இடம், நேரமுமானது; மக்கள் கிராமங்களுக்குப்போய்த் தங்களுக்கு உணவு பதார்த்தங்களை வாங்கும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: அவர்கள் போகவேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவுகொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: இங்கே எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமேயல்லாமல், வேறொன்றும் இல்லை என்றார்கள். அவைகளை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.

