மத் 10:1-7

மத் 10:1-7 IRVTAM

அப்பொழுது, இயேசு தம்முடைய பன்னிரண்டு சீடர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்தஆவிகளைத் துரத்தவும், எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களுடைய பெயர்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான், பிலிப்பு, பர்தொலொமேயு, தோமா, வரி வசூலிப்பவனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுபெயருள்ள லெபேயு, கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே. இந்தப் பன்னிரண்டுபேரையும் இயேசு அனுப்பும்போது, அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் யூதரல்லாதவர்களுடைய நாடுகளுக்குப் போகாமலும், சமாரியருடைய பட்டணங்களில் பிரவேசிக்காமலும், காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் குடும்பத்தாரிடத்திற்குப் போங்கள். போகும்போது, பரலோகராஜ்யம் சமீபமாக இருக்கிறது என்று பிரசங்கியுங்கள்.