லூக் 20:27-47

லூக் 20:27-47 IRVTAM

உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிற சதுசேயர்களில் சிலர் அவரிடத்தில் வந்து: போதகரே, ஒருவன் மனைவியையுடையவனாக இருந்து சந்ததியில்லாமல் மரித்துப்போனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியைத் திருமணம்செய்து, தன் சகோதரனுக்குச் சந்ததியுண்டாக்கவேண்டும் என்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே. சகோதரர்கள் ஏழுபேரிருந்தார்கள், அவர்களில் மூத்தவன் ஒரு பெண்ணைத் திருமணம்செய்து சந்ததியில்லாமல் மரித்துப்போனான். பின்பு இரண்டாம் சகோதரன் அவளைத் திருமணம்செய்து அவனும் சந்ததியில்லாமல் மரித்துப்போனான். மூன்றாம் சகோதரனும் அவளை திருமணம் செய்தான். அப்படியே ஏழுபேரும் அவளைத் திருமணம்செய்து சந்ததியில்லாமல் மரித்துப்போனார்கள். எல்லோருக்கும்பின்பு அந்த பெண்ணும் மரித்துப்போனாள். இவ்விதமாக ஏழுபேரும் அவளைத் திருமணம் செய்திருக்க, உயிர்த்தெழுதலில் அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாக இருப்பாள் என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் மறுமொழியாக: இந்த உலகத்தின் மக்கள் பெண் எடுத்தும் பெண் கொடுத்தும் வருகிறார்கள். மறுமையையும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்குதலையும் அடைய தகுதியானவராக எண்ணப்படுகிறவர்களோ பெண் எடுப்பதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை. அவர்கள் இனி மரிக்கவும் மாட்டார்கள்; அவர்கள் உயிர்த்தெழுதலின் மக்களானபடியால் தேவதூதர்களுக்கு நிகரானவர்களுமாக, தேவனுடைய மக்களுமாக இருப்பார்கள். அல்லாமலும் மரித்தோர் உயிரோடு எழுந்திருப்பார்களென்பதை மோசேயும் முட்செடியைப்பற்றிய வாக்கியத்தில் காண்பித்திருக்கிறார். எப்படியென்றால், யெகோவாவை ஆபிரகாமின் தேவனென்றும் ஈசாக்கின் தேவனென்றும் யாக்கோபின் தேவனென்றும் சொல்லியிருக்கிறார். அவர் மரித்தோரின் தேவனாக இல்லாமல், ஜீவனுள்ளோரின் தேவனாக இருக்கிறார்; எல்லோரும் அவருக்குள் பிழைத்திருக்கிறார்களே என்றார். அப்பொழுது வேதபண்டிதர்களில் சிலர் அதைக்கேட்டு: போதகரே, நன்றாகச் சொன்னீர் என்றார்கள். அதன்பின்பு அவர்கள் அவரிடத்தில் வேறொன்றும் கேட்கத் துணியவில்லை. அவர் அவர்களைப் பார்த்து: கிறிஸ்து தாவீதின் குமாரனென்று எப்படிச் சொல்லுகிறார்கள்? நான் உம்முடைய விரோதிகளை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்று, யெகோவா என் ஆண்டவருடனே சொன்னார் என்று தாவீது தானே சங்கீத புத்தகத்தில் சொல்லுகிறானே. தாவீது அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாக இருப்பது எப்படி” என்றார். பின்பு மக்களெல்லோரும் கேட்கும்போது அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: “நீண்ட அங்கிகளை அணிந்துகொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வணக்கங்களைப் பெறவும், ஜெப ஆலயங்களில் முதன்மையான இருக்கைகளில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம்செய்கிற வேதபண்டிதர்களைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள், அவர்கள் அதிக தண்டனையை அடைவார்கள்” என்றார்.

லூக் 20:27-47 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்