யோசு 7:1-13

யோசு 7:1-13 IRVTAM

இஸ்ரவேல் மக்கள் சபிக்கப்பட்டவைகளினாலே துரோகம் செய்தார்கள்; எப்படியென்றால், யூதாகோத்திரத்தின் சேராகுடைய மகனாகிய சப்தியின் மகன் கர்மீக்குப் பிறந்த ஆகான் என்பவன், சபிக்கப்பட்டவைகளிலே சிலவற்றை எடுத்துக்கொண்டான்; ஆகையால் இஸ்ரவேல் மக்களின்மீது யெகோவாவுடைய கோபம் மூண்டது. யோசுவா எரிகோவிலிருந்து பெத்தேலுக்குக் கிழக்கில் உள்ள பெத்தாவேனுக்கு அருகில் இருக்கிற ஆயீ பட்டணத்திற்குப் போகும்படி ஆட்களை அனுப்பி: நீங்கள் போய், அந்த நாட்டை வேவுபாருங்கள் என்றான்; அந்த மனிதர்கள் போய், ஆயீயை வேவுபார்த்து, யோசுவாவிடம் திரும்பிவந்து, அவனை நோக்கி: மக்கள் எல்லோரும் போகவேண்டியதில்லை; ஏறக்குறைய இரண்டாயிரம் மூவாயிரம்பேர் போய், ஆயீயை முறியடிக்கலாம்; எல்லா மக்களையும் அங்கே போகும்படி வருத்தப்படுத்தவேண்டியதில்லை; அவர்கள் கொஞ்சம்பேர்தான் என்றார்கள். அப்படியே மக்களில் ஏறக்குறைய 3,000 பேர் அந்த இடத்திற்குப் போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஆயீயின் மனிதர்களிடம் தோல்வியடைந்து ஓடிப்போனார்கள். ஆயீயின் மனிதர்கள் அவர்களில் ஏறக்குறைய முப்பத்தாறுபேரை வெட்டிப்போட்டார்கள்; பட்டணவாசலின் வெளியிலிருந்து செபாரீம்வரைக்கும் அவர்களைத் துரத்தி, மலையடிவாரத்தில் அவர்களை வெட்டினார்கள்; மக்களின் இருதயம் கரைந்து தண்ணீராகப்போனது. அப்பொழுது யோசுவா தன்னுடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, அவனும் இஸ்ரவேலின் மூப்பர்களும் மாலைநேரம்வரைக்கும் யெகோவாவின் பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து, தங்களுடைய தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு கிடந்தார்கள். யோசுவா: ஆ, யெகோவாவாகிய ஆண்டவரே, எங்களை அழிக்கும்படிக்கு எமோரியர்களின் கைகளில் ஒப்புக்கொடுப்பதற்காகவா இந்த மக்களை யோர்தான் நதியைக் கடக்கச்செய்தீர்? நாங்கள் யோர்தானுக்கு மறுபுறத்தில் மனதிருப்தியாக இருந்துவிட்டோமானால் நலமாக இருக்கும். ஆ, ஆண்டவரே, இஸ்ரவேலர்கள் தங்களுடைய எதிரிகளுக்கு முதுகைக் காட்டினார்கள்; இப்பொழுது நான் என்ன சொல்லுவேன். கானானியர்களும் தேசத்தின் குடிகள் அனைவரும் இதைக்கேட்டு, எங்களைச் சுற்றி வளைத்துக்கொண்டு, எங்களுடைய பெயரை பூமியில் இல்லாதபடிக்கு வேரில்லாமற்போகச் செய்வார்களே; அப்பொழுது உமது மகத்தான நாமத்திற்கு என்ன செய்வீர் என்றான். அப்பொழுது யெகோவா யோசுவாவை நோக்கி: எழுந்திரு, நீ இப்படி முகங்குப்புற விழுந்துகிடக்கிறது என்ன? இஸ்ரவேலர்கள் பாவம் செய்தார்கள்; நான் அவர்களுக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையை மீறினார்கள்; சபிக்கப்பட்டவைகளில் சிலவற்றை எடுத்துக்கொண்டதும், திருடியதும், ஏமாற்றியதும், தங்களுடைய பொருட்களுக்குள்ளே வைத்ததும் உண்டே. ஆகவே, இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய எதிரிகளுக்கு முன்பாக நிற்க முடியாமல், தங்களுடைய எதிரிகளுக்கு முதுகைக் காட்டினார்கள்; அவர்கள் சபிக்கப்பட்டவர்களானார்கள்; நீங்கள் சபிக்கப்பட்டவைகளை உங்கள் நடுவிலிருந்து அழிக்காவிட்டால், இனி உங்களோடு இருக்கமாட்டேன். எழுந்திரு, நீ மக்களைப் பரிசுத்தம்செய்யச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நாளையதினத்திற்கு உங்களைப் பரிசுத்தம் செய்துகொள்ளுங்கள்; இஸ்ரவேலர்களே, சபிக்கப்பட்டவைகள் உங்கள் நடுவே இருக்கிறது; நீங்கள் சபிக்கப்பட்டவைகளை உங்கள் நடுவிலிருந்து அகற்றாமலிருக்கும்வரை, நீங்கள் உங்களுடைய எதிரிகளுக்கு முன்பாக நிற்கமுடியாது என்று இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார்.