யோவா 12:27-50

யோவா 12:27-50 IRVTAM

இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த நேரத்திலிருந்து என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆனாலும், இதற்காகவே இந்த நேரத்திற்குள் வந்தேன். பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டானது. அங்கே நின்று கொண்டிருந்து, அதைக் கேட்ட மக்கள்: இடிமுழக்கம் உண்டானது என்றார்கள். வேறுசிலர்: தேவதூதன் அவருடனே பேசினான் என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: இந்தச் சத்தம் எனக்காக உண்டாகாமல் உங்களுக்காக உண்டானது. இப்பொழுதே இந்த உலகத்திற்கு நியாயத்தீர்ப்பு உண்டாகிறது; இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி புறம்பாகத் தள்ளப்படுவான். பூமியிலிருந்து உயர்த்தப்பட்டு இருக்கும்போது, எல்லோரையும் என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன் என்றார். இயேசு தாம் எவ்விதமாக மரிக்கப்போகிறார் என்பதைக் குறிக்கும்படி இப்படிச் சொன்னார். மக்கள் அவரைப் பார்த்து: கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று வேதத்தில் சொல்லியதை நாங்கள் கேட்டிருக்கிறோம், அப்படியிருக்க மனிதகுமாரன் உயர்த்தப்படவேண்டியது என்று எப்படிச் சொல்லுகிறீர்; இந்த மனிதகுமாரன் யார் என்றார்கள். அதற்கு இயேசு: இன்னும் கொஞ்சக்காலம் ஒளி உங்களிடம் இருக்கும்; இருளில் நீங்கள் சிக்கிக்கொள்ளாதபடி ஒளி உங்களோடு இருக்கும்போது நடவுங்கள்; இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் எங்கே என்று தெரியாமல் இருக்கிறான். ஒளி உங்களோடு இருக்கும்போது நீங்கள் ஒளியின் பிள்ளைகளாவதற்கு, ஒளியிடம் விசுவாசமாக இருங்கள் என்றார். இவைகளை இயேசு சொல்லி, அவர்களைவிட்டு மறைந்தார். அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை. “கர்த்தாவே, எங்கள் மூலமாகக் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடையக் கரம் யாருக்கு வெளிப்பட்டது” என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன வசனம் நிறைவேறும்படி இப்படி நடந்தது. ஆகவே, அவர்கள் விசுவாசிக்காமல் போனார்கள். ஏனென்றால், ஏசாயா பின்னும்: அவர்கள் கண்களினால் பார்க்காமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருப்பதற்கும், நான் அவர்களைச் சுகமாக்காமல் இருப்பதற்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார்” என்றான். ஏசாயா அவருடைய மகிமையைப் பார்த்து, அவரைக்குறித்துப் பேசுகிறபோது இவைகளைச் சொன்னான். ஆனாலும் அதிகாரிகளிலும் அநேகர் அவரிடம் விசுவாசம் வைத்தார்கள். அப்படியிருந்தும் ஜெப ஆலயத்தைவிட்டு வெளியேற்றப்படாமல் இருக்க, பரிசேயர்களுக்கு பயந்து அதை அறிக்கைசெய்யாமலும் இருந்தார்கள். அவர்கள் தேவனால் வருகிற மகிமையைவிட மனிதர்களால் வருகிற மகிமையை அதிகமாக விரும்பினார்கள். அப்பொழுது இயேசு சத்தமாக: என்மேல் விசுவாசமாக இருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடம் விசுவாசமாக இருக்கிறான். என்னைப் பார்க்கிறவன் என்னை அனுப்பினவரைப் பார்க்கிறான். என்னிடம் விசுவாசமாக இருக்கிறவனெவனும் இருளில் இல்லாதபடி, நான் உலகத்திற்கு ஒளியாக வந்தேன். ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசிக்காமல்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்க வராமல், உலகத்தை இரட்சிக்க வந்தேன். என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிற ஒன்று இருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும். நான் சுயமாகப் பேசவில்லை, நான் பேசவேண்டியது என்ன என்றும் உபதேசிக்கவேண்டியது என்ன என்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார். அவருடைய கட்டளை நித்தியஜீவனாக இருக்கிறது என்று அறிவேன்; ஆகவே, நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்