எபி 9:22-28

எபி 9:22-28 IRVTAM

நியாயப்பிரமாணத்தின்படி ஏறக்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பு உண்டாகாது. ஆகவே, பரலோகத்தில் உள்ளவைகளுக்குச் சாயலானவைகள் இப்படிப்பட்ட பலிகளினாலே சுத்திகரிக்கப்பட வேண்டியதாக இருந்தது; பரலோகத்தில் உள்ளவைகளோ இவைகளிலும் விசேஷித்த பலிகளாலே சுத்திகரிக்கப்படவேண்டியவைகள். அப்படியே, உண்மையான பரிசுத்த இடத்திற்கு அடையாளமான கையினால் செய்யப்பட்ட பரிசுத்த இடத்திலே கிறிஸ்துவானவர் நுழையாமல், பரலோகத்திலே இப்பொழுது நமக்காக தேவனுடைய சமூகத்தில் வேண்டுதல் செய்வதற்காக நுழைந்திருக்கிறார். பிரதான ஆசாரியன் மற்றவர்களுடைய இரத்தத்தோடு ஒவ்வொரு வருடமும் பரிசுத்த இடத்திற்குள் நுழைவதுபோல, அவர் அநேகமுறை தம்மைப் பலியிடுவதற்காக நுழையவில்லை. அப்படியிருந்தால், உலகம் உண்டானதுமுதல் அவர் அநேகமுறை பாடுபடவேண்டியதாக இருக்குமே; அப்படி இல்லை, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்க இந்தக் கடைசிகாலத்தில் ஒரேமுறை வெளிப்பட்டார். அன்றியும், ஒரேமுறை இறப்பதும், பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும், மனிதர்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே, கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்ப்பதற்காக ஒரேமுறை பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாவதுமுறை பாவம் இல்லாமல் தரிசனமாவார்.