கலா 3:10-25

கலா 3:10-25 IRVTAM

நியாயப்பிரமாணத்தின் செய்கைக்காரர்களாகிய எல்லோரும் சாபத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள்; ஏனென்றால் நியாயப்பிரமாணப் புத்தகத்தில் எழுதப்பட்டவைகள்‌ எல்லாவற்றையும் தொடர்ந்து செய்யாதவன்‌ எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே. நியாயப்பிரமாணத்தினாலே தேவன் ஒருவனையும் நீதிமானாக்குகிறதில்லை என்பது வெளிப்படையாக இருக்கிறது. ஏனென்றால், விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே. நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்குரியது இல்லை; அவைகளைச் செய்கிற மனிதனே அவைகளால் பிழைப்பான். மரத்திலே தொங்கவிடப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீக்கி மீட்டுக்கொண்டார். ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் யூதரல்லாத மக்களுக்கு வருவதற்காகவும், ஆவியானவரைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெற்றுக்கொள்வதற்காகவும் இப்படி ஆனது. சகோதரர்களே, மனிதர்களின் முறைகளின்படிச் சொல்லுகிறேன்; மனிதர்களுக்குள்ளே உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை ஒருவனும் தள்ளுகிறதுமில்லை, அதினோடு எதையும் கூட்டுகிறதுமில்லை. ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைப்பற்றிச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்த சந்ததி கிறிஸ்துவே. ஆகவே, நான் சொல்லுகிறது என்னவென்றால், கிறிஸ்துவை முன்னிட்டு தேவனால் முன்னமே உறுதிப்பண்ணப்பட்ட உடன்படிக்கையை நானூற்றுமுப்பது வருடங்களுக்குப்பின்பு உண்டான நியாயப்பிரமாணமானது, வாக்குத்தத்தத்தைப் பயனற்றதாக்காது. அன்றியும், உரிமைப்பங்கானது நியாயப்பிரமாணத்தினாலே உண்டானால் அது வாக்குத்தத்தத்தினாலே உண்டாயிருக்காது; தேவன் அதை ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தினாலே அருளிச்செய்தாரே. அப்படியென்றால், நியாயப்பிரமாணத்தின் நோக்கம் என்ன? வாக்குத்தத்தத்தைப் பெற்ற சந்ததி வரும்வரைக்கும் அக்கிரமங்களினிமித்தமாக நியாயப்பிரமாணம் தேவதூதர்களைக்கொண்டு மத்தியஸ்தனுடைய கையிலே கொடுக்கப்பட்டது. மத்தியஸ்தன் ஒருவனுக்குரியவன் அல்ல, தேவன் ஒருவரே. அப்படியென்றால் நியாயப்பிரமாணம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு எதிரானதா? இல்லையே; நியாயப்பிரமாணம் உயிரைக் கொடுக்கக்கூடியதாக இருந்திருந்தால், நீதியானது நியாயப்பிரமாணத்தினால் உண்டாயிருக்குமே. அப்படி இல்லாததினால், இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசம் உள்ளவர்களுக்குக் கொடுக்கப்படும்படி வேதம் எல்லாவற்றையும் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது. ஆகவே, விசுவாசம் வருகிறதற்கு முன்பே, வெளிப்படப்போகிற விசுவாசத்திற்கு ஏதுவாக நாம் அடைக்கப்பட்டவர்களாக நியாயப்பிரமாணத்தின்கீழ் காவல்பண்ணப்பட்டிருந்தோம். இந்தவிதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவிடம் வழிநடத்துகிற ஆசிரியராக இருந்தது. விசுவாசம் வந்தபின்பு நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவர்கள் இல்லையே.