யாத் 6:1-8

யாத் 6:1-8 IRVTAM

அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நான் பார்வோனுக்குச் செய்வதை இப்பொழுது காண்பாய்; என் வலிமையான கையைக் கண்டு அவர்களைப் போகவிட்டு, அவர்களைத் தன்னுடைய தேசத்திலிருந்து துரத்திவிடுவான்” என்றார். மேலும், தேவன் மோசேயை நோக்கி: “நான் யேகோவா, சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என்னுடைய நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை. அவர்கள் பரதேசிகளாகத் தங்கின தேசமாகிய கானான்தேசத்தை அவர்களுக்குக் கொடுப்பேன் என்று நான் அவர்களோடு என்னுடைய உடன்படிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறேன். எகிப்தியர்கள் அடிமையாக வைத்திருக்கிற இஸ்ரவேலர்களின் பெருமூச்சையும் நான் கேட்டு, என்னுடைய உடன்படிக்கையை நினைத்தேன். ஆதலால், இஸ்ரவேலர்களை நோக்கி: நானே யெகோவா, உங்கள்மேல் எகிப்தியர்கள் சுமத்தின சுமைகளை நீக்கி நான் உங்களை விடுவித்து, உங்களை அவர்கள் அடிமைத்தனத்திற்கு, நீங்கலாக்கி, பலத்த கையினாலும், மகா தண்டனைகளினாலும் உங்களை மீட்டு, உங்களை எனக்கு மக்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு தேவனாக இருப்பேன்; உங்கள்மேல் எகிப்தியர்கள் சுமத்தின சுமைகளை நீக்கி உங்களை விடுவிக்கிற உங்களுடைய தேவனாகிய யெகோவா நான் என்று அறிவீர்கள். ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட தேசத்தில் உங்களைக் கொண்டுபோய், அதை உங்களுக்குச் சொந்தமாகக் கொடுப்பேன்; நான் யெகோவா என்று அவர்களுக்குச் சொல் என்றார்.