யாத் 16:4-18
யாத் 16:4-18 IRVTAM
அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வரச்செய்வேன்; மக்கள் போய், ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக்கொள்ளவேண்டும்; அதினால் அவர்கள் என்னுடைய கட்டளையின்படி நடப்பார்களோ நடக்கமாட்டார்களோ என்று அவர்களைச் சோதிப்பேன். ஆறாம் நாளிலோ, அவர்கள் தினந்தோறும் சேர்க்கிறதைவிட இரண்டுமடங்கு சேர்த்து, அதை ஆயத்தம்செய்து வைக்கவேண்டும்” என்றார். அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் மக்கள் எல்லோரையும் நோக்கி: “யெகோவாவே உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தவர் என்பதை மாலையில் அறிவீர்கள்; அதிகாலையில் யெகோவாடைய மகிமையையும் காண்பீர்கள்; யெகோவாவுக்கு விரோதமான உங்களுடைய முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நீங்கள் எங்களுக்கு விரோதமாக முறுமுறுப்பதற்கு நாங்கள் எம்மாத்திரம்” என்றார்கள். பின்னும் மோசே: “மாலையில் நீங்கள் சாப்பிடுவதற்குக் யெகோவா உங்களுக்கு இறைச்சியையும், அதிகாலையில் நீங்கள் திருப்தியடைவதற்கு அப்பத்தையும் கொடுக்கும்போது இது வெளிப்படும்; யெகோவாவுக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுத்த உங்களுடைய முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நாங்கள் எம்மாத்திரம்? உங்களுடைய முறுமுறுப்புகள் எங்களுக்கு அல்ல, யெகோவாவுக்கே விரோதமாக இருக்கிறது” என்றான். அப்பொழுது மோசே ஆரோனைப் பார்த்து: “நீ இஸ்ரவேல் மக்களாகிய சபையார்கள் எல்லோரையும் நோக்கி: யெகோவாவுக்கு முன்பாக சேருங்கள், அவர் உங்களுடைய முறுமுறுப்புகளைக் கேட்டார் என்று சொல்” என்றான். ஆரோன் இஸ்ரவேல் மக்களாகிய சபையார்களுக்கெல்லாம் இதைச் சொல்லுகிறபோது, அவர்கள் வனாந்திரதிசையாகத் திரும்பிப்பார்த்தார்கள்; அப்பொழுது யெகோவாவுடைய மகிமை மேகத்திலே காணப்பட்டது. யெகோவா மோசேயை நோக்கி: “இஸ்ரவேல் மக்களின் முறுமுறுப்புகளைக் கேட்டிருக்கிறேன்; நீ அவர்களுடன் பேசி, நீங்கள் மாலையில் இறைச்சியைச் சாப்பிட்டு, அதிகாலையில் அப்பத்தால் திருப்தியாகி, நான் உங்களுடைய தேவனாகிய யெகோவா என்பதை அறிந்துகொள்வீர்கள் என்று சொல்” என்றார். மாலையில் காடைகள் வந்து விழுந்து முகாமை மூடிக்கொண்டது. அதிகாலையில் முகாமைச் சுற்றி பனி பெய்திருந்தது. பெய்திருந்த பனி நீங்கினபின்பு, இதோ, வனாந்திரத்தின்மீது எங்கும் உருண்டையான ஒரு சிறிய பொருள் உறைந்த பனிக்கட்டிப் பொடியைப்போலத் தரையின்மேல் கிடந்தது. இஸ்ரவேல் மக்கள் அதைக் கண்டு, அது என்னவென்று அறியாமல் இருந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, “இது என்ன என்றார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: “இது யெகோவா உங்களுக்குச் சாப்பிடக்கொடுத்த அப்பம். யெகோவா கட்டளையிடுகிறது என்னவென்றால், அவரவர் சாப்பிடும் அளவுக்குத் தகுந்தபடி அதில் எடுத்துச் சேர்க்கட்டும்; உங்களிலுள்ள நபர்களின் எண்ணிக்கையின்படி, அவனவன் தன் தன் கூடாரத்தில் இருக்கிறவர்களுக்காக தலைக்கு ஒரு ஓமர் அளவு எடுத்துக்கொள்ளட்டும்” என்றான். இஸ்ரவேல் மக்கள் அப்படியே செய்து, சிலர் அதிகமாகவும் சிலர் குறைவாகவும் சேர்த்தார்கள். பின்பு, அதை ஓமரால் அளந்தார்கள்: அதிகமாகச் சேர்த்தவனுக்கு மீதியானதும் இல்லை, குறைவாகச் சேர்த்தவனுக்குக் குறைவானதும் இல்லை; அவரவர் தாங்கள் சாப்பிடும் அளவுக்குத்தகுந்தபடி சேர்த்தார்கள்.

