யாத் 14:5-14

யாத் 14:5-14 IRVTAM

மக்கள் ஓடிப்போய்விட்டார்கள் என்று எகிப்தின் ராஜாவிற்கு அறிவிக்கப்பட்டபோது, மக்களுக்கு விரோதமாகப் பார்வோனும் அவனுடைய ஊழியக்காரர்களும் மனம் மாறி: “நமக்கு வேலை செய்யாதபடி நாம் இஸ்ரவேலர்களைப் போகவிட்டது என்ன காரியம்” என்றார்கள். அவன் தன்னுடைய இரதத்தைப் பூட்டி, தன்னுடைய மக்களைக் கூட்டிக்கொண்டு, முதல்தரமான அறுநூறு இரதங்களையும், எகிப்திலுள்ள மற்ற எல்லா இரதங்களையும், அவைகள் எல்லாவற்றிற்கும் அதிபதிகளான வீரர்களையும் கூட்டிக்கொண்டு போனான். யெகோவா எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேலர்களைப் பின்தொடர்ந்தான், இஸ்ரவேலர்கள் பலத்த கையுடன் புறப்பட்டுப் போனார்கள். எகிப்தியர்கள் பார்வோனுடைய எல்லாக் குதிரைகளுடனும், இரதங்களோடும் அவனுடைய குதிரைவீரர்களோடும் சேனைகளோடும் அவர்களைத் தொடர்ந்துபோய், கடலின் அருகிலே பாகால்செபோனுக்கு எதிரே இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்பாக முகாமிட்டிருக்கிற அவர்களை நெருங்கினார்கள். பார்வோன் அருகில் வருகிறபோது, இஸ்ரவேலர்கள் தங்களுடைய கண்களை ஏறெடுத்துப்பார்த்து, எகிப்தியர்கள் தங்களுக்குப் பின்னே வருகிறதைக் கண்டு, மிகவும் பயந்தார்கள்; அப்பொழுது இஸ்ரவேலர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள். அன்றியும் அவர்கள் மோசேயை நோக்கி: “எகிப்திலே கல்லறைகள் இல்லையென்றா வனாந்திரத்திலே சாகும்படி எங்களைக் கொண்டுவந்தீர்? நீர் எங்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்ததால், எங்களுக்கு இப்படிச் செய்தது ஏன்? நாங்கள் எகிப்திலே இருக்கும்போது, எகிப்தியர்களுக்கு வேலை செய்ய எங்களைச் சும்மா விட்டுவிடும் என்று சொன்னோம் அல்லவா? நாங்கள் வனாந்திரத்திலே சாவதைவிட எகிப்தியர்களுக்கு வேலைசெய்கிறது எங்களுக்கு நலமாக இருக்குமே” என்றார்கள். அப்பொழுது மோசே மக்களை நோக்கி: “பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் யெகோவா உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியர்களை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள். யெகோவா உங்களுக்காக யுத்தம்செய்வார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்” என்றான்.