அப் 9:10-18

அப் 9:10-18 IRVTAM

தமஸ்குவிலே அனனியா என்னும் பேருள்ள ஒரு சீடன் இருந்தான். அவனுக்குக் கர்த்தர் தரிசனமாகி: “அனனியாவே,” என்றார். அவன்: “ஆண்டவரே, இதோ, அடியேன்” என்றான். அப்பொழுது கர்த்தர்: “நீ எழுந்து நேர்த்தெருவு என்னப்பட்ட தெருவிற்குப்போய், யூதாவின் வீட்டிலே தர்சுபட்டணத்தானாகிய சவுல் என்னும் பேருள்ள ஒருவனைத் தேடு; அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான்; அனனியா என்னும் பேருள்ள ஒரு மனிதன் தன்னிடத்தில் வரவும், தான் பார்வையடையும்படி தன்மேல் கையை வைக்கவும் தரிசனம் கண்டான்” என்றார். அதற்கு அனனியா: “ஆண்டவரே, இந்த மனிதன் எருசலேமிலுள்ள உம்முடைய பரிசுத்தவான்களுக்கு எத்தனையோ தீங்குகளைச் செய்தானென்று அவனைக்குறித்து அநேகரால் கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கேயும் உம்முடைய நாமத்தை ஆராதிக்கின்ற எல்லோரையும் கைதுசெய்யும்படி அவன் பிரதான ஆசாரியனிடத்தில் அதிகாரம் பெற்றிருக்கிறானே” என்றான். அதற்குக் கர்த்தர்: “நீ போ; அவன் யூதரல்லாதவர்களுக்கும், ராஜாக்களுக்கும், இஸ்ரவேல் சந்ததிகளுக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட நபராக இருக்கிறான். அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவு பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன்” என்றார். அப்பொழுது அனனியா போய், வீட்டிற்குள்ளே பிரவேசித்து, அவன்மேல் கையை வைத்து: “சகோதரனாகிய சவுலே, நீ வந்த வழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்த ஆவியானவராலே நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார்” என்றான். உடனே அவன் கண்களிலிருந்து மீன் செதில்கள் போன்றவைகள் விழுந்தது. அவன் பார்வையடைந்து, எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றான்.