அப் 5:1-21

அப் 5:1-21 IRVTAM

அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவனுடைய மனைவியாகிய சப்பீராளும் தங்களுடைய சொத்துக்களை விற்றார்கள். தன் மனைவியின் சம்மதத்தோடு அவன் விற்ற பணத்திலே ஒரு பங்கை மறைத்துவைத்து, ஒரு பங்கைக் கொண்டுவந்து, அப்போஸ்தலர்களுடைய பாதத்திலே வைத்தான். பேதுரு அவனை நோக்கி: அனனியாவே, சொத்தை விற்றதில் ஒரு பங்கை மறைத்துவைத்து, பரிசுத்த ஆவியானவரிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன? அதை விற்கும் முன்னே அது உன்னுடையதாயிருக்கவில்லையோ? அதை விற்றப்பின்பும் அதின் கிரயப்பணம் உன்னிடத்திலிருக்கவில்லையோ? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட எண்ணம் கொண்டதென்ன? நீ மனிதனிடத்தில் இல்லை, தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான். அனனியா இந்த வார்த்தைகளைக் கேட்டவுடனே, கீழே விழுந்து மரித்துப்போனான். இவைகளைக் கேள்விப்பட்ட எல்லோருக்கும் மிகுந்த பயமுண்டானது. வாலிபர்கள் எழுந்து, அவனைத் துணியில் சுற்றி, வெளியே எடுத்துக்கொண்டுபோய், அடக்கம்பண்ணினார்கள். ஏறக்குறைய மூன்று மணி நேரத்திற்குப்பின்பு, அவனுடைய மனைவி நடந்ததை அறியாமல், உள்ளே வந்தாள். பேதுரு அவளை நோக்கி: நிலத்தை இவ்வளவிற்குத்தான் விற்றீர்களா என்று எனக்குச் சொல் என்றான். அவள்: ஆம், இவ்வளவிற்குத்தான் என்றாள். பேதுரு அவளை நோக்கி: கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன? இதோ, உன் கணவனை அடக்கம்பண்ணினவர்களுடைய கால்கள் வாசற்படியிலே வந்திருக்கிறது, உன்னையும் வெளியே கொண்டுபோவார்கள் என்றான். உடனே அவள் அவனுடைய பாதத்தில் விழுந்து மரித்துப்போனாள். வாலிபர்கள் உள்ளே வந்து, அவள் மரித்துப்போனதைக் கண்டு அவளை வெளியே எடுத்துக்கொண்டுபோய், அவளுடைய கணவனருகே அடக்கம்பண்ணினார்கள். சபையாரெல்லோருக்கும், இவைகளைக் கேள்விப்பட்ட மற்ற எல்லோருக்கும், மிகுந்த பயமுண்டானது. அப்போஸ்தலர்களுடைய கைகளினாலே அநேக அடையாளங்களும் அற்புதங்களும் மக்களுக்குள்ளே செய்யப்பட்டது. சபையாரெல்லோரும் ஒருமனப்பட்டு சாலொமோனுடைய மண்டபத்தில் கூடியிருந்தார்கள். மற்றவர்களில் ஒருவரும் அவர்களோடு சேரத் துணியவில்லை. ஆனாலும் மக்கள் அவர்களைப் புகழ்ந்தார்கள். அநேக ஆண்களும், பெண்களும் விசுவாசமுள்ளவர்களாகி கர்த்தரிடத்தில் அதிகமதிகமாகச் சேர்க்கப்பட்டார்கள். சுகவீனமானவர்களைப் படுக்கைகளின்மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, பேதுரு நடந்துபோகும்போது அவனுடைய நிழலாவது அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு, அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள். சுற்றுப்பட்டணங்களிலுமிருந்து திரளான மக்கள் சுகவீனமானவர்களையும் அசுத்தஆவிகளால் துன்புறுத்தப்பட்டவர்களையும் எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவர்களெல்லோரும் குணமாக்கப்பட்டார்கள். அப்பொழுது பிரதான ஆசாரியனும் அவனுடனே இருந்த சதுசேய சமயத்தினர் அனைவரும் எழும்பி, பொறாமையினால் நிறைந்து, அப்போஸ்தலர்களைப் பிடித்து, பொதுவான சிறைச்சாலையிலே வைத்தார்கள். கர்த்தருடைய தூதன் இரவிலே சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து, அவர்களை வெளியே கொண்டுவந்து: நீங்கள் போய், தேவாலயத்திலே நின்று, இந்த ஜீவனுள்ள வார்த்தைகள் எல்லாவற்றையும் மக்களுக்குச் சொல்லுங்கள் என்றான். அவர்கள் அதைக்கேட்டு, அதிகாலமே தேவாலயத்தில் பிரவேசித்து போதகம்பண்ணினார்கள். பிரதான ஆசாரியனும் அவனுடனே இருந்தவர்களும் வந்து, ஆலோசனைச் சங்கத்தினரையும் இஸ்ரவேல் கோத்திரத்தின் மூப்பர்களெல்லோரையும் வரவழைத்து, அப்போஸ்தலர்களை அழைத்துவரும்படி சிறைச்சாலைக்கு அதிகாரிகளை அனுப்பினார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்