1 இராஜா 19:9-14
1 இராஜா 19:9-14 IRVTAM
அங்கே அவன் ஒரு குகைக்குள் போய்த் தங்கினான்; இதோ, யெகோவாவுடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர்: எலியாவே, இங்கே நீ என்ன செய்கிறாய் என்றார். அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய யெகோவாக்காக மிகவும் பக்திவைராக்கியமாக இருந்தேன்; இஸ்ரவேல் மக்கள் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்; நான் ஒருவன் மட்டும் மீதியாக இருக்கிறேன்; என்னுடைய உயிரையும் எடுக்கத் தேடுகிறார்கள் என்றான். அப்பொழுது அவர்: நீ வெளியே வந்து யெகோவாவுக்கு முன்பாக மலையின்மேல் நில் என்றார்; அப்பொழுது, இதோ, யெகோவா கடந்துபோனார்; யெகோவாவுக்கு முன்பாகப் மலைகளைப் பிளக்கிறதும் பாறைகளை உடைக்கிறதுமான பலத்த பெருங்காற்று உண்டானது; ஆனாலும் அந்தக் காற்றிலே யெகோவா இருக்கவில்லை; காற்றுக்குப்பின்பு பூமி அதிர்ச்சி உண்டானது; பூமி அதிர்ச்சியிலும் யெகோவா இருக்கவில்லை. பூமி அதிர்ச்சிக்குப் பின்பு அக்கினி உண்டானது; அக்கினியிலும் யெகோவா இருக்கவில்லை; அக்கினிக்குப்பின்பு அமைதியான மெல்லிய சத்தம் உண்டானது. அதை எலியா கேட்டபோது, தன்னுடைய சால்வையால் தன்னுடைய முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து, குகையின் வாசலில் நின்றான். அப்பொழுது, இதோ, எலியாவே, இங்கே நீ என்ன செய்கிறாய் என்கிற சத்தம் அவனுக்கு உண்டானது. அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய யெகோவாவுக்காக மிகவும் பக்திவைராக்கியமாக இருந்தேன்; இஸ்ரவேல் மக்கள் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தால் கொன்றுபோட்டார்கள், நான் ஒருவன் மட்டும் மீதியாக இருக்கிறேன்; என்னுடைய உயிரையும் எடுக்கத் தேடுகிறார்கள் என்றான்.


