மத்தேயு எழுதிய சுவிசேஷம் 1
1
இயேசு கிறிஸ்துவின் குடும்ப வரலாறு
(லூக்கா 3:23-38)
1இயேசு கிறிஸ்துவின் குடும்ப வரலாறு பின்வருமாறு: தாவீதின் வழி வந்த வர் இயேசு. தாவீது ஆபிரகாமின் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
2ஆபிரகாமின் குமாரன் ஈசாக்கு.
ஈசாக்கின் குமாரன் யாக்கோபு.
யாக்கோபின் பிள்ளைகள் யூதாவும்
அவன் சகோதரர்களும்.
3யூதாவின் மக்கள் பாரேசும்
சாராவும்
(அவர்களின் தாய் தாமார்.)
பாரேசின் குமாரன் எஸ்ரோம்.
எஸ்ரோமின் குமாரன் ஆராம்.
4ஆராமின் குமாரன் அம்மினதாப்.
அம்மினதாபின் குமாரன் நகசோன்.
நகசோனின் குமாரன் சல்மோன்.
5சல்மோனின் குமாரன் போவாஸ்.
(போவாசின் தாய் ராகாப்.)
போவாசின் குமாரன் ஓபேத்.
(ஓபேத்தின் தாய் ரூத்.)
ஓபேத்தின் குமாரன் ஈசாய்.
6ஈசாயின் குமாரன் ராஜாவாகிய தாவீது.
தாவீதின் குமாரன் சாலமோன்.
(சாலமோனின் தாய் உரியாவின் மனைவி.)
7சாலமோனின் குமாரன் ரெகொபெயாம்.
ரெகொபெயாமின் குமாரன் அபியா.
அபியாவின் குமாரன் ஆசா.
8ஆசாவின் குமாரன் யோசபாத்.
யோசபாத்தின் குமாரன் யோராம்.
யோராமின் குமாரன் உசியா.
9உசியாவின் குமாரன் யோதாம்.
யோதாமின் குமாரன் ஆகாஸ்.
ஆகாஸின் குமாரன் எசேக்கியா.
10எசேக்கியாவின் குமாரன் மனாசே.
மனாசேயின் குமாரன் ஆமோன்.
ஆமோனின் குமாரன் யோசியா.
11யோசியாவின் மக்கள் எகொனியாவும்
அவன் சகோதரர்களும்.
(இக்காலத்தில்தான் யூதர்கள்
பாபிலோனுக்கு அடிமைகளாகக்
கொண்டு செல்லப்பட்டனர்.)
12அவர்கள் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்:
எகொனியாவின் குமாரன் சலாத்தியேல்.
சலாத்தியேலின் குமாரன் சொரொபாபேல்.
13சொரொபாபேலின் குமாரன் அபியூத்.
அபியூத்தின் குமாரன் எலியாக்கீம்.
எலியாக்கீமின் குமாரன் ஆசோர்.
14ஆசோரின் குமாரன் சாதோக்.
சாதோக்கின் குமாரன் ஆகீம்.
ஆகீமின் குமாரன் எலியூத்.
15எலியூத்தின் குமாரன் எலியாசார்.
எலியாசாரின் குமாரன் மாத்தான்.
மாத்தானின் குமாரன் யாக்கோபு.
16யாக்கோபின் குமாரன் யோசேப்பு.
யோசேப்பின் மனைவி மரியாள்.
மரியாளின் குமாரன் இயேசு. கிறிஸ்து என
அழைக்கப்பட்டவர் இயேசுவே.
17எனவே ஆபிரகாம் முதல் தாவீதுவரை பதினான்கு தலைமுறைகள். தாவீது முதல் யூதர்கள் அடிமைப்பட்டு பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டதுவரைக்கும் பதினான்கு தலைமுறைகள். யூதர்கள் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டதிலிருந்து கிறிஸ்து பிறக்கும்வரை பதினான்கு தலைமுறைகள்.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பு
(லூக்கா 2:1-7)
18இயேசு கிறிஸ்துவின் தாய் மரியாள். இயேசுவின் பிறப்பு இப்படி நிகழ்ந்தது. மரியாள் யோசேப்புக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தாள். அவர்கள் திருமணத்திற்கு முன்பே மரியாள் தான் கருவுற்றிருப்பதை அறிந்தாள். பரிசுத்த ஆவியின் வல்லமையால் மரியாள் கருவுற்றிருந்தாள். 19மரியாளின் கணவனாகிய யோசேப்பு மிகவும் நல்லவன். மக்களின் முன்னிலையில் மரியாளை அவன் அவமதிக்க விரும்பவில்லை. எனவே யோசேப்பு மரியாளை இரகசியமாகத் தள்ளிவிட நினைத்தான்.
20யோசேப்பு இந்த சிந்தையாயிருக்கும்பொழுது, கர்த்தருடைய தூதன் யோசேப்பின் கனவில் தோன்றி, “தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, மரியாளை உன் மனைவியாக ஏற்றுக்கொள்ளத் தயங்காதே. அவள் கருவிலிருக்கும் குழந்தை பரிசுத்த ஆவியானவரால் உண்டானது. 21அவள் ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாள். அக்குழந்தைக்கு இயேசு#1:21 இயேசு என்ற பெயருக்கு இரட்சிப்பு என்று பொருள். எனப் பெயரிடு. அவர் தமது மக்களின் பாவங்களை நீக்கி இரட்சிப்பார்” என்றான்.
22இவையெல்லாம் தீர்க்கதரிசியின் மூலமாகத் தேவன் சொன்னவைகளின் நிறைவேறுதல்களாக நடந்தன. தீர்க்கதரிசி சொன்னது இதுவே:
23“கன்னிப் பெண் ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாள்.
அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்கள்.” #ஏசா. 7:14
(இம்மானுவேல் என்பதற்கு,
“தேவன் நம்முடன் இருக்கிறார்” என்று பொருள்.)
24விழித்தெழுந்த யோசேப்பு, கர்த்தருடைய தூதன் சொன்னபடியே மரியாளை மணந்தான். 25ஆனால் மரியாள் தன் குமாரனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவளை அறியவில்லை. யோசேப்பு அவருக்கு, “இயேசு” எனப் பெயரிட்டான்.
Dewis Presennol:
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 1: TAERV
Uwcholeuo
Rhanna
Copi

Eisiau i'th uchafbwyntiau gael eu cadw ar draws dy holl ddyfeisiau? Cofrestra neu mewngofnoda
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International