YouVersion Logo
Search Icon

செப்பனியா 1

1
1ஆமோனின் மகன் யோசியா யூதாவின் அரசனாக ஆட்சிபுரிந்த காலத்தில் கர்த்தருடைய வார்த்தை செப்பனியாவுக்கு வந்தது. செப்பனியா கூஷியின் மகன், கூஷி கெதலியாவின் மகன், கெதலியா அமரியாவின் மகன், அமரியா எசேக்கியாவின் மகன்.
கர்த்தர் கொண்டுவரப்போகும் அழிவு பற்றிய எச்சரிக்கை
2“பூமியின் மேற்பரப்பில் காணப்படும் அனைத்தையும்,
நான் வாரி அழித்தொழிப்பேன்”
என கர்த்தர் அறிவிக்கின்றார்.
3“நான் மனிதர்களையும், மிருகங்களையும் வாரி அழித்தொழிப்பேன்;
நான் ஆகாயத்துப் பறவைகளையும், கடலின் மீன்களையும்
வாரி அழித்தொழிப்பேன்.”
“நான் பூமியின் மேற்பரப்பிலிருந்து மனிதர்களை அகற்றும்போது,
கொடியவர்களையும் அவர்களுடைய தடைக்கல்லையும் அழிப்பேன்”#1:3 இந்த வசனம் மூலமொழியில் தெளிவில்லாமல் உள்ளது.
என்று கர்த்தர் அறிவிக்கின்றார்.
4நான் யூதாவுக்கு எதிராகவும், எருசலேமில் வாழும்
அனைவருக்கெதிராகவும் என் கையை நீட்டுவேன்;#1:4 கையை நீட்டுவேன் தண்டனையை கொண்டுவருவேன்.
இந்த இடத்திலிருந்து நான் பாகால் தெய்வ வணக்கத்தின்
மீதியான எல்லாவற்றையும் அகற்றுவேன்.
விக்கிரக வணக்கத்தில் ஈடுபடுகிறவர்களையும் அவர்களுடைய பூசாரிகளையும்
அவர்களுடைய பெயர்களே இல்லாமல் போகும்படி அழிப்பேன்.
5நட்சத்திரசேனைகளை வணங்குவதற்காக,
வீட்டின் மேல்மாடங்களில் வீழ்ந்து வணங்குகிறவர்களையும் அகற்றுவேன்.
கர்த்தரை விழுந்து வழிபட்டும், அவர் பேரில் ஆணையிடுவதோடு,
மோளேக் தெய்வத்தின் பேரிலும் ஆணையிடுகின்றவர்களை அகற்றுவேன்.
6கர்த்தரைப் பின்பற்றுவதிலிருந்து பின்வாங்கியவர்களையும்,
கர்த்தரைத் தேடாமலும்,
அவரிடத்தில் விசாரிக்காமலும் இருப்பவர்களை அகற்றுவேன்.
7ஆண்டவராகிய கர்த்தருக்கு முன்பாக மௌனமாயிருங்கள்.
ஏனெனில் கர்த்தரின் தண்டனையின் நாள் சமீபமாயுள்ளது.
கர்த்தர் ஒரு பலியை ஆயத்தம்செய்து,
அதற்குத் தாம் அழைத்தவர்களைப் பரிசுத்தப்படுத்தியிருக்கிறார்.
8கர்த்தருடைய பலியின் நாளில்,
நான் பிரபுக்களையும்,
இளவரசர்களையும்,
பிறநாட்டவரின் ஆடைகளை
அணிபவர்களையும்#1:8 பிறநாட்டவரின் ஆடைகளை அணிபவர்களையும் அல்லது பிறநாட்டவரின் வழக்கங்கள், தெய்வ வழிபாடு தண்டிப்பேன்.
9அந்நாளில் வாசற்படியைத் தாண்டி
தங்கள் தெய்வங்களின் கோயில்களை#1:9 கோயில்களை அல்லது தங்கள் எஜமானின் வீட்டை
வன்முறையாலும் வஞ்சனையினாலும்
நிரப்புகிறவர்களைத் தண்டிப்பேன்.
10கர்த்தர் அறிவிக்கின்றதாவது:
அந்தநாளில் எருசலேம் மதிலிலுள்ள
மீன் வாசலில் இருந்து அழுகுரல் கேட்கும்.
அந்த நகரத்தின் புதிய பகுதியிலிருந்து புலம்பலும்,
குன்றுகளிலிருந்து அது இடிந்து விழும் சத்தமும் ஒலிக்கும்.
11சந்தைப் பகுதியில்#1:11 சந்தைப் பகுதியில் மோர்டார் வாழும் மக்களே, அழுது புலம்புங்கள்.
உங்கள் வியாபாரிகள் அனைவரும் அழிந்து போவார்கள்.
வெள்ளி வியாபாரம்#1:11 வெள்ளி வியாபாரம் அல்லது நாணயமாற்று வியாபாரத்தில் ஈடுபடுவோர் செய்கின்ற யாவரும் பாழாய்ப் போவார்கள்.
12அந்தவேளையில் நான் எருசலேமை விளக்குகளை வைத்துத் தேடி,
கர்த்தர் நன்மையோ தீமையோ எதையும் செய்யவில்லை என்று சொல்லிக்கொண்டு,
அலட்சியமாக இருப்பவர்களைத் தண்டிப்பேன்.
13அவர்களுடைய செல்வம் சூறையாடப்படும்,
வீடுகள் உடைத்து அழிக்கப்படும்.
அவர்கள் வீடுகளைக் கட்டினாலும்,
அவற்றில் குடியிருக்க மாட்டார்கள்,
திராட்சைத் தோட்டம் நடுகை செய்தாலும்
அதன் திராட்சைரசத்தைக் குடிக்க மாட்டார்கள்.
14கர்த்தரின் தண்டனையின் பெரிய நாள் சமீபித்துள்ளது;
அது மிக சமீபமாய் இருந்து விரைவாய் வருகின்றது.
கேளுங்கள்! கர்த்தரின் நாளில் ஏற்படும் அழுகை மிகவும் கசப்பாயிருக்கும்.
வலிமை மிகுந்த இராணுவ வீரரும்கூட கூக்குரலிடுவார்கள்.
15அந்தநாள் கடுங்கோபத்தின் நாள்,
துன்பமும் வேதனையும் நிறைந்த நாள்,
தொல்லையும் அழிவுமான நாள்,
அது மேகங்களும் இருளும்
சூழ்ந்த நாள்.
16அரணான நகரங்களுக்கு எதிராகவும்,
மூலைக் கோபுரங்களுக்கு எதிராகவும்
எக்காள சத்தமும் போர் முரசும் எழுப்பப்படும் நாள்.
17“மக்கள் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்ததால்,
நான் அவர்கள்மீது துன்பத்தை வரச் செய்வேன்;
அவர்கள் பார்வையற்றவர்களைப் போன்று தட்டுத்தடுமாறி நடப்பார்கள்.
அவர்களுடைய இரத்தம் புழுதியைப் போல் ஊற்றப்படும்.
அவர்களுடைய உடல்கள் சாணம் போன்று நிலத்தில் கொட்டப்படும்.
18கர்த்தருடைய கடுங்கோபத்தின் நாளிலே,
அவர்களுடைய வெள்ளியோ தங்கமோ
அவர்களை விடுவிக்க மாட்டாது.”
அவருடைய வைராக்கியத்தின் நெருப்பினால்,
முழு உலகமும் சுட்டெரிக்கப்படும்.
ஏனெனில் அவர் பூமியில் வாழும் யாவருக்கும்
திடீரென ஒரு முடிவைக் கொண்டுவருவார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in